சரியான காரணம் இல்லாமல் பணி இடமாறுதல் கேட்டால் கட்டாய ஓய்வு கர்நாடக ரிசர்வ் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. எச்சரிக்கை
சரியான காரணம் இல்லாமல் பணி இடமாறுதல் கேட்டால் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று கர்நாடக ரிசர்வ் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
சரியான காரணம் இல்லாமல் பணி இடமாறுதல் கேட்டால் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று கர்நாடக ரிசர்வ் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பணி இடமாற்றம்
கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் பிரிவில் பணியாற்றும் இளம் வயது போலீஸ்காரர்கள் ஏராளமானவர்கள் பணி இடமாற்றம் கோரி உயர் அதிகாரிகளுக்கு கடிதம் கொடுத்து வருகிறார்கள். பணி இடமாறுதலுக்கான காரணமாக அவர்கள் தங்களுக்கு சர்க்கரை நோய், முதுகுவலி, சுவாச கோளாறு, உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பிற இடங்களுக்கு பணி இடமாற்றம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, இளம் போலீஸ்காரர்கள் பணி இடமாறுதல் கேட்பதை தடுத்து நிறுத்த கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் உயர் அதிகாரிகள் யோசித்து வந்தனர்.
கட்டாய ஓய்வு
இந்த நிலையில், கர்நாடக ரிசர்வ் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில், ‘சரியான காரணம் இல்லாமல் பணி இடமாறுதல் கேட்கும் போலீஸ்காரர்கள் கட்டாய ஓய்வில் அனுப்பப்படுவார்கள். கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் விதி 285-ன்படி போலீஸ்காரர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட உள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை பற்றி அறிந்த சில போலீஸ்காரர்கள் தங்களின் பணி இடமாறுதல் கோரிய கடிதத்தை திரும்ப பெற்று உள்ளனர். இன்னும் சிலர் திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராணுவத்துக்கு சமமானது
இதுகுறித்து கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் கூறியதாவது:-
ரிசர்வ் போலீஸ் என்பது ராணுவத்துக்கு சமமானது. இங்கு பணியாற்றுபவர்கள் ஒழுக்கமாக இருப்பதுடன், மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட வேண்டும். எனவே, உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டவர்களை இந்த பிரிவில் வைத்து பணி செய்ய நான் விரும்பவில்லை. நான் விரும்புவது என்னவெனில், திடகாத்திரமான உடலுடன் மாநிலத்தை பாதுகாக்க பணி செய்பவர்களை தான்.
முதுகு வலி, சர்க்கரை நோயை காரணம் காட்டி பணி இடமாற்றம் கேட்பது சரியானது அல்ல. இருப்பினும், சிலருடைய உடல்நலம் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அவர்களிடம் பணி இடமாறுதல் வழங்குவதன் மூலம் எப்படி நோயின் பிடியில் இருந்து தப்பிப்பார்கள் என்பது பற்றி கேட்டு அறியப்படும். பணி இடமாற்றம் கேட்பவர்களை தண்டிப்பதற்காக இந்த சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை. உடல்நலம் சரியில்லாதவர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும் என்பதற்காக தான் இந்த முடிவு. இவ்வாறு காலியாகும் இடங்களுக்கு புதிதாக ஆட்களை சேர்த்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story