அதிகாரிகளின் பாராமுகம்: இடைநின்ற மாணவர்கள் குழந்தை தொழிலாளர் ஆகும் நிலை


அதிகாரிகளின் பாராமுகம்: இடைநின்ற மாணவர்கள் குழந்தை தொழிலாளர் ஆகும் நிலை
x
தினத்தந்தி 23 Nov 2018 3:45 AM IST (Updated: 23 Nov 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் படிப்பை நிறுத்தி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்காததால் குழந்தை தொழிலாளராகும் நிலை உள்ளது.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டம் கடந்த 1985-ம் ஆண்டு உருவானதில் இருந்து பள்ளிக்கல்வியில் சாதனை புரிந்து வருகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக மாநில அளவில் பொதுத்தேர்வில் முதல் இடம்பெற்று சாதனை படைத்து வருகிறது. மாவட்டத்தில் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் குடும்பச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களை கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. விதிமுறைப்படி இடைநிற்கும் மாணவர்கள் பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கோ, வட்டார வள மையத்திற்கோ தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் இடைநின்ற மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்தித்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது வழக்கம். ஆனால் சமீபகாலமாக முறையான கண்காணிப்பு இல்லாததால் இடைநிற்கும் மாணவர்கள் பற்றிய தகவல்களை கல்வித்துறைக்கு தெரியப்படுத்தாத நிலை உள்ளது. இதனால் இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்படாமல் அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலை ஏற்படுகிறது. சில மாணவர்கள் முறை தவறி குற்றவியல் சம்பவங்களில் ஈடுபடும் நிலையும் உள்ளது.

மாவட்டத்தில் திருச்சுழி பகுதியில் 22 மாணவிகளும், பி.குமாரலிங்காபுரத்தில் 22 மாணவ-மாணவிகளும் நரிக்குடியில் 6 பேரும், குமிழங்குளத்தில் 10 பேரும், முத்துராமலிங்கபுரத்தில் 4 பேரும், கொடிக்குளத்தில் 5 பேரும், வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் 7 பேரும், ராமசாமியாபுரம், மேலகோபாலபுரம், புதுப்பட்டி, கான்சாபுரம் ஆகிய கிராமங்களில் தலா 4 பேரும், கூமாபட்டியில் 6 பேரும், தம்பிப்பட்டியில் 3 பேரும், மடத்துப்பட்டியில் 3 பேரும், விஜயகரிசல்குளத்தில் 2 பேரும், ஏ.முக்குளம், பிள்ளையார்குளம் ஆகிய கிராமங்களில் தலா 4 பேரும், வீரசோழன், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதியில் தலா 5 பேரும், மேட்டமலை, சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் தலா 10 பேரும் இடைநின்ற மாணவர்கள் என மாவட்ட குழந்தை தொழிலாளர் திட்ட ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால் இடைநின்ற இந்த மாணவ-மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர்களோ, மாவட்ட நிர்வாகமோ நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாகவே இருந்து வருகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இடைநின்ற மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறுவதை தடுக்க வேண்டியது தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும். இடைநின்ற மாணவர்களை பற்றிய தகவல் தெரிவிக்காத தலைமை ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அவ்வப்போது பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் உள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டியது பள்ளிக்கல்வித்துறையின் பணியாகும்.

ஒருகாலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று பல்வேறு அமைப்புகள் அறிவித்து வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையாலும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் முயற்சியாலும் மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இடைநிற்கும் மாணவர்களை மாவட்ட நிர்வாகமும், தேசிய குழந்தை தொழிலாளர் நல திட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் மீண்டும் குழந்தை தொழிலாளர் உருவாகும் நிலை இருக்கிறது.

எனவே இடைநிற்கும் மாணவர்களை அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறுவதற்கு முன்பே பள்ளிகளில் சேர்த்து மீண்டும் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். பல்வேறு காரணங்களை கூறி இதற்கான நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பது கூடாது.

Next Story