மராட்டிய சட்டசபையில் திருத்த மசோதா நிறைவேறியது உணவில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை ஜாமீனிலும் வெளிவர முடியாது


மராட்டிய சட்டசபையில் திருத்த மசோதா நிறைவேறியது உணவில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை ஜாமீனிலும் வெளிவர முடியாது
x
தினத்தந்தி 23 Nov 2018 4:30 AM IST (Updated: 23 Nov 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் திருத்த மசோதா மராட்டிய சட்டசபையில் நிறைவேறியது.

மும்பை, 

உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் திருத்த மசோதா மராட்டிய சட்டசபையில் நிறைவேறியது.

மராட்டிய மேல்-சபையில் நேற்று காலை காங்கிரஸ் உறுப்பினர் பாய் ஜக்தாப் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் பேசியதாவது:-

உணவு கலப்படம்

பால் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பாலை விவசாயிகளிடம் இருந்து தான் சேகரிக்கிறது. ஆனால் அந்த பால் நுகர்வோரை சென்றடைவதற்குள் கலப்படங்களால் விஷமாக மாறி விடுகிறது.

சோப்பு பவுடர், யூரியா, ஆடை நீக்கிய பால் பவுடர், காஸ்டிக் சோடா, குளுக்கோஸ், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்ற பொருட்கள் பால் கெடாமல் இருக்க அதனுடன் கலக்கப்படுகின்றன. இதன்மூலம் அதை குடிக்கும் நபர்களின் உயிர் ஆபத்திற்குள்ளாகிறது.

இதுபோன்ற உணவு கலப்படங்களை எளிதில் அடையாளம் காண முடியாது. ஆனால் உணவு மற்றும் மருந்து துறையினரின் ஆய்வுக்கு பின்னரும் இந்த முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டத் திருத்தம்

இதற்கு உணவு மற்றும் வினியோகத்துறை மந்திரி கிரிஷ் பாபத் பதில் அளித்து கூறியதாவது:-

இதுபோன்ற கலப்பட முறைகேடுகளை தடுக்க உணவு கலப்பட தடுப்பு சட்டம் 1969-ல் திருத்தம் கொண்டுவர மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட திருத்தம் மூலம் உணவில் கலப்படம் செய்வது ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாக கருதப்படும். மேலும் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குரல் வாக்கெடுப்பு

இந்த நிலையில் சட்டசபையில் நேற்று மாலை மராத்தா மற்றும் தங்கர் சமுதாய மக்களின் இட ஒதுக்கீடு பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இருப்பினும் அமளிக்கு மத்தியில் உணவு கலப்பட தடுப்பு சட்டத்திருத்த மசோதாவை மந்திரி கிரிஷ் பாபத் தாக்கல் செய்தார்.

பின்னர் மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து பேசிய அவர், அதனை நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால் மராத்தா மற்றும் தங்கர் சமுதாய மக்களின் இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு மத்தியில் உணவு கலப்பட தடுப்பு சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மேல்-சபையில்...

இந்த சட்டத்திருத்த மசோதா ேமல்-சபையில் நிறைவேற்றப்பட வேண்டியது உள்ளது.

மராட்டியத்தில் தற்போது நிலுவையில் உள்ள உணவு கலப்பட தடுப்பு சட்டத்தில் 6 மாதம் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இதேபோன்ற சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Next Story