உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி: கலப்பட நெய் தயாரித்த நிறுவனத்துக்கு ‘சீல்’
கோவையில் கலப்பட நெய் தயாரித்த நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
கோவை,
கோவையில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், கோவை சாய்பாபாகாலனி கே.கே.புதூர் காளியப்பன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் கலப்பட நெய் தயாரிப்பதாக கோவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர் தனது அலுவலக ஊழியர்களுடன் குறிப்பிட்ட வீட்டுக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அந்த வீட்டில் கலப்பட நெய் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த 500 லிட்டர் கலப்பட நெய் மற்றும் 3 ஆயிரம் போலி லேபிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-
கலப்பட நெய் தயாரித்த வீட்டில் தீபத்துக்கு பயன்படுத்தும் நெய் தயாரிப்பதாக கூறினார்கள். ஆனால் அதற்கு அவர்கள் உணவு பாதுகாப்புத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. அதற்கு வணிகவரித் துறையில் அனுமதி பெற வேண்டும். ஆனால் அந்த துறையிடமும் அவர்கள் அனுமதி பெற்றதாக தெரியவில்லை. மேலும் உணவுக்கான நெய் தயாரிப்பதற்கு உணவு பாதுகாப்புத்துறையிடம் லைசென்சு பெற வேண்டும். ஆனால் அந்த லைசென்சு அவர்கள் பெறவில்லை.
தீப நெய் தயாரிப்பதாக கூறப்படும் அந்த வீட்டில் உணவுக்கான நெய் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களின் லேபிள்களும் இருந்தன. எனவே அவர்கள் சிறிய அளவு சுத்தமான நெய்யுடன் நல்லெண்ணெய், பாமாயில் மற்றும் வாசனைக்கான சில பொருட்களையும் சேர்த்து கலப்பட நெய் தயாரித்துள்ளனர். அந்த கலப்பட நெய் பாட்டில்கள் மீது பிரபல நிறுவனங்களின் லேபிளை ஒட்டியதாக தெரிகிறது. அது பார்ப்பதற்கு உணவுக்கு பயன்படுத்தும் நெய் போன்று காணப்படும். கலப்பட நெய் பாட்டில்களை கடைகளுக்கு சப்ளை செய்துள்ளார்களா? எவ்வளவு நாட்களாக கலப்பட நெய் தயாரிக்கிறார்கள் என்பது குறித்து அங்கிருந்த பிரகாஷ் (வயது 32) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். கலப்பட நெய்யின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்ததும் கலப்பட நெய் தயாரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட நெய்யின் மதிப்பு ரூ.2 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே பகுதியில் மணி என்பவர் கலப்பட நெய் தயாரித்ததை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த 120 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மாதிரி சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story