மத்திய மந்திரிக்கே இந்த கதி; சாதாரண மக்களின் நிலை என்ன? யுத்தகளம் போல் சபரிமலை இருக்கிறது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரிக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாகும். சபரிமலை யுத்தகளம் போல் இருக்கிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். கோவைக்கு நேற்று வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை,
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக நான் நிலக்கல் பகுதிக்கு சென்றபோது பஸ் நிலையம் மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்கள் பம்பை பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து அங்குள்ள போலீஸ் சூப்பிரண்டிடம் கேட்டபோது, சாலை மோசமாக இருப்பதாகவும், நிலச்சரிவு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
என்னிடம் போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் சந்திரா பேசியது வித்தியாசமாக இருந்ததை உணர முடிந்தது. சபரிமலைக்கு சென்றபோது எனது காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீஸ் உயர் அதிகாரி பார்த்துவிட்டு தவறுதலாக காரை நிறுத்திவிட்டதாக கூறுகிறார்.
இன்றைய சபரிமலையின் நிலையை அய்யப்ப பக்தர்கள் யாராலும் தாங்க முடியாது. யுத்த களம் போல் சபரிமலை இருக்கிறது. நிறைய தடுப்புகள் போடப்பட்டு பக்தர்கள் மிரட்டப்படுகிறார்கள். மனிதாபிமான நோக்கத்தோடு பக்தர்களை அரசு அணுக வேண்டும். அறநிலைய துறையினர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ‘சூ’ அணிந்து கோவில் பகுதிக்கு செல்கிறார்கள்.
சபரிமலையில் அதிகளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதற்கு கண்காணிப்பாளர் ‘மாஸ்டர் பிளான்‘ போட்டுள்ளார். கோவிலை அழிக்கக்கூடிய வகையில் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. பஜனை பாடல்கள் பாடப்படும் மண்டபம் அமைதியாக இருக்கிறது. எதையோ இழந்தது போன்ற நிலைமை அங்கு உள்ளது.
சபரிமலை நிர்வாகம் கேரள அரசிற்கு கொடுக்கப்பட்டு இருக்கிறதோ என கேள்வி எழுப்பும் வகையில் நிலைமை உள்ளது. சபரிமலைக்கு அதிகமாக செல்லக்கூடிய மக்கள் ஒவ்வொருவரும், கேரள அரசிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் பக்தர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பிரச்சினைகளை களைந்து செயல்படுத்தப்பட வேண்டும். சபரிமலைக்கு போகக்கூடிய பக்தர்களுக்கு கெடுபிடி இருக்கக்கூடாது.
சபரிமலை கோவில் அய்யப்பனுக்கு சொந்தமானது. அய்யப்பன் மக்களுக்கு சொந்தமானவர், அரசுக்கு அல்ல என்பதை கேரள அரசு புரிந்துகொள்ள வேண்டும். கேரள அரசின் குறிக்கோள் சபரிமலைக்கு பக்தர்கள் வரக்கூடாது என்பதுதான்.
சபரிமலையில் தங்கி இருக்க நேரம் கிடையாது என்ற வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில் மத்திய மந்திரியையே கேரள அரசு இப்படி நடத்துகிறது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களது நிலைமை பரிதாபம்தான்.
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். தமிழக அரசு புயலுக்கு முன்னால் எடுத்த நடவடிக்கைகளை பார்க்கும் போது மிகச்சிறப்பாக இருந்தது. தற்போது சாலையில் உள்ள தடைகளை அகற்றினால் மட்டுமே கிராமத்திற்குள் செல்லும் நிலை உள்ளது. ஒருசிலர் கஜா புயல் விவகாரத்தை அரசியல் ஆக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். கஜா புயல் குறித்து தமிழக அரசு இன்னும் அறிக்கை கொடுக்கவில்லை. அறிக்கை கிடைத்த பின்புதான் தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா? என்பது தெரியும்.
பிரதமருக்கு பல வேலைகள் இருப்பதால் மற்ற மந்திரிகளை வைத்து பாதிப்புகளை தெரிந்து வருகிறார். உள்துறை மந்திரி ஏற்கனவே தமிழக முதல்-அமைச்சரிடம் பேசியுள்ளார். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க மற்ற மத்திய மந்திரிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், நாகராஜன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story