தேவதானப்பட்டியில்: வீட்டில் இருந்த பீரோவை தூக்கி சென்று 10 பவுன் நகைகள் கொள்ளை


தேவதானப்பட்டியில்: வீட்டில் இருந்த பீரோவை தூக்கி சென்று 10 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 24 Nov 2018 3:00 AM IST (Updated: 23 Nov 2018 10:24 PM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டியில் வீட்டில் இருந்த பீரோவை தூக்கி சென்று உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 38). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதை அறிந்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் வீட்டிலிருந்த பீரோவை தூக்கிக்கொண்டு எதிரில் உள்ள பப்பாளி தோட்டத்துக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். பீரோவில் இருந்த பத்திரங்கள் மற்றும் துணிகளை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் செல்லப்பாண்டிக்கு தகவல் தெரிவித்தனர். அதையொட்டி அவர் வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இந்த கொள்ளையில் 2-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story