திருநெல்வேலியில் நடக்கிறது இந்திய விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம்
இந்திய விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி முதல், திருநெல்வேலியில் நடக்கிறது. அதில் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்,
இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய விமானப்படையில் ஏர்மேன் குரூப் ஒய் நாண் டெக்னிக்கல் பணியிடத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் திருநெல்வேலியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை நடக்கிறது.
9-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை வேலூர், திருவண்ணாமலை, சென்னை, கோவை, திண்டுக்கல், காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
இதற்கான கல்வித்தகுதி 12-ம் வகுப்பில் சராசரி 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். இத்தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் 1998-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதியில் இருந்து 2002-ம் ஆண்டு ஜூன் 26-ந்தேதிக்குள் பிறந்து திருமணமாகாத ஆண்களாக இருக்க வேண்டும். தேர்வில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் தங்களது 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (4 நகல்கள்), மாற்றுச் சான்றிதழ்களுடன் (4 நகல்கள்) பங்கேற்கலாம்.
அசல் சான்றிதழ்களை பள்ளி, கல்லூரிகளில் சமர்ப்பித்திருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரிடம் அசல் சான்றிதழ்கள் பள்ளி, கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற உறுதி சான்றிதழுடன் சுய சான்றொப்பம் இடம் பெற்ற சான்றிதழ்களை (4 நகல்கள்) சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வில் கலந்து கொள்ளும் நபர்கள் வேறு மாவட்டத்தில் ஏதேனும் பள்ளியிலோ, கல்லூரியிலோ பயின்றிருந்தால் சொந்த மாவட்டத்திற்கான சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 7 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (நவம்பர் 2018-க்கு முன்னதாக எடுத்திருக்கக்கூடாது) கொண்டு வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.ai-r-m-e-ns-e-l-e-ct-i-on.cd-ac.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். எனவே வேலூர் மாவட்ட இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story