விவசாயி கொலை வழக்கில் மகனுடன் தம்பதி கைது


விவசாயி கொலை வழக்கில் மகனுடன் தம்பதி கைது
x
தினத்தந்தி 24 Nov 2018 4:00 AM IST (Updated: 23 Nov 2018 10:39 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே வரப்பு தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மகனுடன் தம்பதி கைது செய்யப்பட்டனர்.

செய்யாறு, 

செய்யாறு தாலுகா வடதண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 33), விவசாயி. இவரது மனைவி உமா. கடந்த 20-ந் தேதி விநாயகமூர்த்தி அருகாவூர் கிராமத்தில் சீனுவாசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பிணமாக கிடந்தார். மேலும் உடல் அருகே ரத்தக்கறை படிந்த கடப்பாரை கிடந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனுவாசன் (52), கொலையை மறைத்ததற்காக அவரது மனைவி உமாசங்கரி (46), இவர்களது மகன் மணிகண்டன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘சீனுவாசனுக்கும், விநாயகமூர்த்திக்கும் அருகாவூர் கிராமத்தில் அருகருகே விவசாய நிலம் உள்ளது. நிலத்திற்கு இடையே உள்ள வரப்பு சம்பந்தமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை யொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சீனுவாசன், விநாயகமூர்த்தியை கடப்பாரையால் தாக்கியுள்ளார். இதில் விநாயகமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இதுகுறித்து சீனுவாசன், அவரது மனைவி உமாசங்கரி, மகன் மணிகண்டன் ஆகியோரிடம் கூறிவிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்த போது கொலை வழக்கில் தன்னை போலீசார் தேடி வருவதை அறிந்த சீனுவாசன் அருகாவூர் கிராம நிர்வாக அலுவலர் பரமேஷ்வரனிடம் சரணடைந்தார்’ என்றனர்.

இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சுந்தரபாண்டியன், அவர்கள் 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் 3 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story