தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப திருவிழா வீடுகள்தோறும் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப திருவிழா வீடுகள்தோறும் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
x
தினத்தந்தி 24 Nov 2018 4:30 AM IST (Updated: 23 Nov 2018 11:04 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது. மேலும் வீடுகள் தோறும் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பெண்கள் கோவில்களில் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இதேபோன்று வீடுகள் தோறும் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை பரணிதீபம் ஏற்றப்பட்டது. சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சொக்கப்பனை எரித்து வழிபாடு நடத்தினார்கள். இதையொட்டி ஏராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.

தர்மபுரி விருபாட்சிபுரத்தில் உள்ள ராகவேந்திரசாமி கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில், கோட்டை கல்யாண காமாட்சி உடனமர் மல்லிகார்ஷூன சாமி கோவில், பரவாசுசாமி கோவில், கடைவீதி வெங்கட்ரமண சாமி கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில், மதிகோன்பாளையம் ஈஸ்வரன், மாரியம்மன் கோவில், பாரதிபுரம் முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

காரிமங்கலம் மலை மீதுள்ள அருணேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷம் எழுப்பினர். இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகீரிஸ்வரர் கோவில், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், அரூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மொரப்பூர், ஏரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரியில் புதுப்பேட்டை சோமேஸ்வரர் கோவில், பழையபேட்டை கவீஸ்வரர் கோவில், சிவன் கோவில்களில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமிக்கு தீபம் ஏற்றி வழிப்பட்டனர். இதே போல் வீடுகளில் மாலை தீபம் ஏற்றப்பட்டது.

ஓசூர் கோகுல் நகரில் உள்ள மீனாட்சி சுந்்தரேஸ்வரர் கோவில், காமராஜ் காலனியில் உள்ள காசி விசுவநாதர், நெசவுத்தெருவில் உள்ள சோமேஸ்வரர் கோவில், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நேற்று மாலை கோவிலை சுற்றிலும் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. பின்னர், மூலவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி, மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மேலும், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பெண்கள் தங்கள் வீடுகள் முன்பு கோலமிட்டும், வீட்டை சுற்றிலும் அகல் விளக்குகளை ஏற்றியும் வைத்தனர். பூஜை அறையிலும் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர். இதேபோல் சூளகிரியில் உள்ள காசிஈஸ்வரர் கோவில், அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகிய சிவ ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

Next Story