காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Nov 2018 4:15 AM IST (Updated: 23 Nov 2018 11:56 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் சூனாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளகொண்டஅகரம், புதுக்குடி, புதுப்பட்டு, விளாம்பட்டு போன்ற பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பொதுமக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உறிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஓங்கூர் ஆற்று கரையோரபகுதியான வெள்ளகொண்டாஅகரம், புதுக்குடி, விளாம்பட்டு பகுதிகளை பார்வையிட்டார். ஓங்கூர் ஆற்றில் இருந்து கிராமங்களுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க மணல்மூட்டைகளை கொண்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட வெள்ளகொண்டாஅகரம் கிராமத்தையொட்டி ஓங்கூர் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஆண்டுதோறும் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆங்காங்கே கரை உடைந்து ஒரு சில இடங்களில் கிராமத்திற்குள் தண்ணீர் செல்வது வழக்கம்.

இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மணல்மூட்டைகளை அடுக்கி மழைநீர் ஊருக்குள் வராதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அந்த பகுதி மக்களுக்கு தேவையான உணவு வழங்கப்படுகிறது. மேலும் அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பட்டா உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கி அவர்களுக்கும் வீடு கட்டி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மதுராந்தகம் ஆர்.டி.ஓ. மாலதி , மதுராந்தகம் தாசில்தார் ஏகாம்பரம், உதவி செயற்பொறியாளர்கள் சாமிநாதன், சுப்பிரமணி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பத்மாஜானகி, ஒன்றிய பொறியாளர் செந்தில்நாதன் , மண்டல துணை தாசில்தார் நசீன் , ஊராட்சி செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர் மதுராந்தகம் தாலுகாவில் உள்ள வெள்ளியம்பாக்கம், கரசங்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், குண்ணப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட, பஞ்சந்திருத்தி கிராமம் மயான பகுதியில் 40 இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தாழ்வான இந்த பகுதியில் நேற்று முன்தினம் மழைநீர் தேங்கியதையடுத்து அவர்களை கலெக்டர் பொன்னையா நேரில் சந்தித்து அவர்களுக்கு தற்காலிகமாக தங்க இடம், உண்ண உணவு, தண்ணீர் போன்றவற்றை வழங்கினார். அப்போது அவருடன் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. முத்துவேல், திருப்போரூர் தாசில்தார் ராஜ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story