புயல் பாதித்த பகுதிகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் நிவாரண பொருட்கள் வாகனங்களில் அனுப்பிவைப்பு


புயல் பாதித்த பகுதிகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் நிவாரண பொருட்கள் வாகனங்களில் அனுப்பிவைப்பு
x
தினத்தந்தி 24 Nov 2018 4:15 AM IST (Updated: 24 Nov 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

புயல் பாதித்த பகுதிகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் நிவாரண பொருட்கள் வாகனங்களில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு,

கஜா புயல் தாக்குதல் காரணமாக திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் உதவி செய்து வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சக்தி மசாலா நிறுவனங்கள் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டது. மேலும், ஈரோட்டில் இருந்து தஞ்சைக்கு 10 டன் அரிசி கடந்த 19–ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் புயலால் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சக்தி மசாலா நிறுவனங்கள் சார்பில் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் 10 டன் அரிசி நேற்று முன்தினம் லாரி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பி.சி.துரைசாமி, இயக்குனர்கள் சாந்தி துரைசாமி, செந்தில்குமார், எம்.இளங்கோ, செங்கதிர்வேலன் ஆகியோர் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக ஈரோடு கேட்டுப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.டி. இன்டர்நே‌ஷனல் பள்ளிக்கூடம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. பள்ளிக்கூட நிர்வாகத்தின் சார்பிலும், ஆசிரிய–ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் மூலமும் சேகரிக்கப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள அரிசி, சேலை, வேட்டி, போர்வை, துண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பள்ளிக்கூட முதல்வர் சாரா தலைமையில் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.

கோபி தினசரி மார்க்கெட் சங்கம் மூலம் ரூ.2 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, பால் போர்வை, மெழுகுவர்த்தி, பால் பவுடர், கொசுவர்த்தி உள்பட பல்வேறு நிவாரண பொருட்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டையில் உள்ள பொதுமக்களுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. 2 வேன்கள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மார்க்கெட் சங்க தலைவர் எம்.பி.துரை தலைமை தாங்கி கொடியசைத்து 2 வேன்களையும் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் செல்வம், துணைத்தலைவர் மணி, துணைச்செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 9 டன் அரிசி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில தலைவர் கே.தங்கராஜ் தலைமை தாங்கினார். நிதி நிறுவன தலைவர் ஜி.தங்கராஜ், மாநில துணைத்தலைவர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, லாரி மூலம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 9 டன் அரிசியை அனுப்பி வைத்தார். இதில் பஸ் உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, செயலாளர் ரத்தினசாமி, பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story