டிசம்பர் மாதம் 25–ந்தேதிக்குள் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை வழங்கப்படும் - கலெக்டர் உறுதி


டிசம்பர் மாதம் 25–ந்தேதிக்குள் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை வழங்கப்படும் - கலெக்டர் உறுதி
x
தினத்தந்தி 24 Nov 2018 4:15 AM IST (Updated: 24 Nov 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 2017–18–ம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகள் அனைவருக்கும் டிசம்பர் 25–ந்தேதிக்குள் பயிர் காப்பீடு தொகை வழங்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. விவசாய இணை இயக்குனர் சுசீலா, நபார்டு உதவி மேலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து கலெக்டர் வீரராகவ ராவ் பேசியதாவது:–

 ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2016–17–ம் ஆண்டில் விடுபட்ட 12 கிராமங்களை சேர்ந்த 712 விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை ரூ.3 கோடியே 68 லட்சத்து 94 ஆயிரம் வரப்பெற்று வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 2017–18–ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு தொகை டிசம்பர் மாதம் 25–ந்தேதிக்குள் கண்டிப்பாக வழங்கப்படும்.

மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் இயல்பான அளவை விட குறைவாகவே மழை பெய்துள்ளது. இன்னும் பருவமழை காலம் உள்ளதால் மழையை எதிர்பார்த்துள்ளோம். மழைக்காலம் இன்னும் உள்ளதால் அனைத்து நீர்நிலைகளிலும் 70 சதவீதத்திற்கும் குறைவாக தண்ணீர் தேக்கிவைக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.

வைகை அணையில் இருந்து முதல்–அமைச்சர் உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டுஉள்ளது. இந்த ஆண்டு முதன்முறையாக விதிகளை மீறாமல் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுஉள்ளது. போதிய தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது பற்றி விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை.

மேலும் தண்ணீர் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிலையில் அனைத்து நீர்நிலைகளிலும் ஓரளவு தண்ணீர் உள்ளது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து ஆயிரத்து 967 எக்டேரில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்துள்ளனர். வருகிற 30–ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். இதற்கான அடங்கல் சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 76,373 பேர் அடங்கல் சான்றிதழ் பெற்றுள்ளனர். ஒரு லட்சம் பேர் பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story