கஜா புயலால் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ.92 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு கலெக்டர் ரோகிணி தகவல்


கஜா புயலால் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ.92 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2018 4:30 AM IST (Updated: 24 Nov 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதித்த மாவட்டங்களுக்கு சேலத்தில் இருந்து இதுவரை ரூ.92 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம், 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.41.46 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் 7 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை மாவட்ட கலெக்டர் ரோகிணி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு 3 லாரிகளிலும், திருவாரூர் மாவட்டத்துக்கு 2 லாரிகளிலும், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 1 லாரியிலும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 1 லாரியிலும் என மொத்தம் 7 லாரிகள் மூலம் ரூ.41 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், நேற்று முன்தினம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ரூ.16½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் 2 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 7 லாரிகள் மூலம் ரூ.41.46 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களும், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ரூ.16½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் 2 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதாவது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத்துறைகளின் சார்பில் இதுவரை ரூ.92 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சப்-கலெக்டர்களும் பல்வேறு மாவட்டங்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நிவாரண உதவிகளுக்கு சேலம் மாநகராட்சி பணியாளர்கள் சார்பில் 130 பேர் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும், சேலம் மாவட்ட வன அலுவலகம் சார்பில் 16 பேர் தஞ்சாவூர் மாவட்டத்துக்கும், மின்வாரியம் மேட்டூர் சரகம் சார்பில் 578 பேர் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும், மின்வாரியம் சேலம் சரகம் சார்பில் 1,004 பேர் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும், மேட்டூர் மீன்வளத்துறை அலுவலகம் சார்பில் 10 பேர் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கும் என மொத்தம் 1,738 பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தளவாட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நிவாரண பொருட்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் பெறும் பிரிவில் வழங்கலாம். மேலும் ரொக்கமாகவும், நன்கொடைகள் மற்றும் உதவிகள் மூலமாகவும் வழங்கலாம். நிவாரண பொருட்கள் வழங்குவோர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் ராஜேஷ்குமாரை தொடர்பு கொண்டு நிவாரண பொருட்களை அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story