தொடர் மழை: ரோஜா பூங்காவில் பூக்கள் உதிர்ந்தன - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தொடர் மழை காரணமாக ஊட்டி ரோஜா பூங்காவில் பூக்கள் உதிர்ந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. ஊட்டி நகரில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரக ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கவாத்து செய்தல், தண்ணீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், இயற்கை உரம் இடுதல் உள்ளிட்ட பணிகளை பூங்கா ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இதுதவிர சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை ஓரத்தில் அலங்கார செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அழகாக வெட்டப்பட்டு இருக்கிறது. சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் பூங்காவை ரசிக்க நிலா மாடம், இருக்கைகள், காட்சி முனைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2-வது சீசனையொட்டி ரோஜா பூங்காவில் செடிகளில் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், வெள்ளை போன்ற வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்கின. இதனை பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். இதற்கிடையே தற்போது ஊட்டியில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் பலத்த காற்றால் ரோஜா பூக்கள் உதிர தொடங்கி உள்ளன. மழைத்துளி பூக்களில் காயாமல் இருந்து கொண்டே இருப்பதால், அவை அழுகி கீழே விழுகிறது.
மேலும் பலத்த காற்று வீசுவதால் பூக்களில் இதழ்கள் உதிர்ந்து ஆங்காங்கே பாத்திகளில் சிதறி கிடக்கிறது. இதனால் பெரும்பாலான ரோஜா செடிகளில் பூக்களே இல்லை. ரோஜா பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பூக்கள் அழுகி இருப்பதையும், உதிர்ந்து கிடப்பதையும் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகளை மலர்ந்த புன்னகையுடன் வரவேற்ற ரோஜா செடிகள் தற்போது பூக்கள் இன்றி வெறுமையாய் காணப்படுகிறது. அழுகிய மற்றும் உதிர்ந்த பூக்களை அகற்றும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story