சிங்கம்புணரியில் புயலால் சேதமான மரங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
சிங்கம்புணரியில் புயலால் சேதமான மரங்கள் குறித்து கணக்கிடும் பணி தொடங்கியது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி வட்டாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சிங்கம்புணரி ஒன்றியம் மற்றும் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களில் குறிப்பாக தென்னை, மாமரங்கள் போன்றவை புயலால் அதிகம் பாதிப்புக்குள்ளானது. வேங்கைப்பட்டி, பிரான்மலை, கிருங்காகோட்டை போன்ற பகுதிகளில் உள்ள மரங்கள் புயலால் வேரோடு சாய்ந்தன.
அதைத்தொடர்ந்து அரசு இழப்பீடு வழங்கும் முயற்சியில் இறங்கி உள்ள நிலையில், இந்த பகுதிகளில் சேதமான மரங்களை கணக்கிடும் பணியை சிங்கம்புணரி வேளாண்மை உதவி தொடக்க அலுவலர் செல்வி தலைமையில் அதிகாரிகள் தொடங்கினர்.
அப்போது அவர் கூறும் போது, வரும் காலங்களில் தென்னையை பதியம் போடும் போது சுமார் 2½ அடி ஆழத்தில் பதியம் போட்டல் தென்னை மரத்தின் வேர்கள் பூமியின் ஆழத்தில் சென்று விடும். இதனால் புயலின் போது அதிக காற்று வீசினால் கூட மரங்கள் சாயாது என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.