சேலம் சூரமங்கலத்தில் கடையில் பதுக்கிய 229 கிலோ குட்கா பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
சேலம் சூரமங்கலத்தில் ஒரு கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 229 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சூரமங்கலம்,
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாவாராம், ஹமீரா ராம் ஆகியோர் பேன்சி ஸ்டோர் என்ற கடையை நடத்தி வருகின்றனர். இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட பேன்சி ஸ்டோரில் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கடையில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் 229 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததாக அந்த பேன்சி ஸ்டோர் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும், கடை உரிமையாளர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு குட்கா எப்படி கிடைத்தது? எந்த ஊரில் இருந்து கொண்டுவரப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story