துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டுக்கு புதிய திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டுக்கு புதிய திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Nov 2018 4:00 AM IST (Updated: 24 Nov 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் மேம்பாட்டுக்காக ‘புராஜெக்ட் நியூ விங்ஸ்’ என்ற புதிய திட்டத்தை நேற்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் மேம்பாட்டுக்காக ‘புராஜெக்ட் நியூ விங்ஸ்’ என்ற புதிய திட்டத்தை நேற்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்.

புதிய திட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் வாரிசுகளின் மேம்பாட்டுக்கான ‘புராஜெக்ட் நியூ விங்ஸ்’ என்ற புதிய திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு, புராஜெக்ட் நியூ விங்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது;-

துப்புரவு பணியாளர்களின் குடும்பங்கள் பல தலைமுறைகளாக இதே தொழிலில் ஈடுபடும் நிலை உள்ளது. இதை மாற்றுவதற்காகவும், அவர்களுடைய மேம்பாட்டுக்காகவும் ஏற்கனவே இந்த திட்டம் நெல்லை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு துப்புரவு பணியாளர்களின் வாரிசுகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர்.

வேலைவாய்ப்பு

இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்த சுமார் 16 ஆயிரம் நபர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். துப்புரவு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி பயிலவும், உயர்கல்விக்கு தேவையான உதவிகளும் வழங்கப்படும். மேலும் வேலைக்கு செல்ல விரும்பும் 18 வயது முதல் 25 வயதுள்ளவர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் மூலம் தனித்திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வாரிசுகளுக்கு...

சுயமாக தொழில் செய்திட விரும்பும் நபர்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயிற்சியும், கடனுதவிகளும் வழங்கிட நடவடிக்்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் வாரிசுகள் பல்வேறு தொழில்களுக்கு சென்று முன்னேற்றமடைய செய்யும் இந்த திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி துணை இயக்குனர் ஏஞ்சல் விஜய நிர்மலா, வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குனர் பேச்சியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story