மன்னார்குடியில், மின்சாரம் வழங்க வலியுறுத்தி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காரை வழிமறித்து மக்கள் வாக்குவாதம்
மன்னார்குடியில், மின்சாரம் வழங்க வலியுறுத்தி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்ற காரை பொதுமக்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுந்தரக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார்குடி, திருமக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. மேலும் வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் கஜா புயலால் மன்னார்குடி 33-வது வார்டில் உள்ள மின்கம்பங்கள் முழுவதும் சேதமடைந்து விட்டன. இதனால் இப்பகுதியில் கடந்த 8 நாட்களாக மின்சாரம் இல்லை. ஆதலால் புயலால் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்களை அமைத்து உடனடியாக மின்சாரம் வழங்க வலியுறுத்தி தஞ்சை-மன்னார்குடி சாலையில் நேற்று திடீரென பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக தஞ்சையில் இருந்து வேதாரண்யம் பகுதிக்கு கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காரில் சென்றார். அந்த கார், மன்னார்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கடந்து செல்ல முயன்றபோது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், மத்திய மந்திரியின் காரை வழிமறித்தனர்.
பொதுமக்கள் தனது காரை மறித்ததும் காரை நிறுத்தச்சொல்லிய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், காரை விட்டு இறங்கி வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதிக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பொன்.ராதாகிருஷ்ணனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள், எங்கள் பகுதிக்கு மின்சாரம் வழங்கும்வரையில் இந்த பகுதி வழியாக எந்த காரையும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறினர்.
அதனை கேட்ட பொன்.ராதாகிருஷ்ணன், புதிய மின்கம்பங்கள் அமைத்து உடனடியாக மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு பொன்.ராதாகிருஷ்ணன் காருக்கு வழிவிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மின்சாரம் கேட்டு மத்திய மந்திரியின் காரை வழிமறித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story