மடத்துக்குளம் பகுதியில் விதை பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு
மடத்துக்குளம் பகுதியில் விதை பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
போடிபட்டி,
மடத்துக்குளம் வட்டார பகுதிகளில் 25–க்கும் மேற்பட்ட தனியார் நெல் விதை பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. கோ 51, ஏ.டி.டி.43, ஏ.எஸ்.டி. 16 ரக நெல் விதை பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பண்ணைகளில் விதைச்சான்று இணை இயக்குனர் செல்வராஜ், விதைச்சான்று உதவி இயக்குனர் சிவக்குமார் மற்றும் விதைச்சான்று அலுவலர்கள் ஷர்மிளா, விமலா, ஹேமலதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். சோழமாதேவியில் உள்ள ஒரு நெல் விதை பண்ணையிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் போது விதை பண்ணைகளில் பிற ரக விதைகள் கலப்பு இல்லாத வண்ணம் பராமரிக்க வேண்டும். தரமான விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும். தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று பண்ணையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பின்னர் விதைச்சான்று அதிகாரிகள் கூறியதாவது:–
விதைச்சான்று அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்ட தரச்சான்று வழங்கப்பட்ட விதை கொண்ட பையில் விதைச்சான்று அலுவலர் கையெழுத்துடன் கூடிய முத்திரைச்சீட்டு இணைக்கப்பட்டு இருக்கும். அதன் மூலம் தரமான விதைகளை விவசாயிகள் அறிந்து கொள்ள முடியும். விஞ்ஞானிகளால் மேம்படுத்தப்பட்டு வழங்கப்படும் முதல் தரமான விதைகளுக்கு மஞ்சள் நிறத்திலும், அதற்கு அடுத்த நிலையான ஆதார நிலை விதைகளுக்கு வெள்ளை நிறமும், அதற்கு அடுத்த நிலையான சான்று நிலை விதைகளுக்கு நீலநிறத்திலும் அடையாள சீட்டு இணைக்கப்பட்டு இருக்கும்.
விதை சான்று இல்லாத விதைகளை முளைக்க வைத்து அதில் இருந்து மீண்டும் விதைகள் எடுத்தால் எதிர்பார்த்த மகசூல் பெற முடியாது. எனவே சான்று பெற்ற விதைகளை வாங்கி உபயோகிப்பதன் மூலம் மகசூல் இழப்பை தவிர்க்கலாம். இது நெல் விதைகளுக்கு மட்டுமில்லாமல் மக்காச்சோளம், உளுந்து, பாசிபயிறு, கொள்ளு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் பொருந்தும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.