பட்டுக்கோட்டையில் பலத்த மழை: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி

பட்டுக்கோட்டையில், பலத்த மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
பட்டுக்கோட்டை,
கஜா புயல் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை சின்னா, பின்னாமாக்கி விட்டு சென்று விட்டது. இந்த மாவட்டங்களில் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள், பல லட்சக்கணக்கான மரங்கள் சேதம் அடைந்தன. வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் பலியானார்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி சிவக்கொல்லை தெருவைச் சேர்ந்தவர் சங்கர்(வயது 45). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகாததால் தனது அக்காள் வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று அதிகாலை பட்டுக்கோட்டையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வீட்டின் மேற்கூரை இடிந்து தூங்கிக்கொண்டிருந்த சங்கர் மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கி சங்கர், அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story