நாராயணசாமியின் வேண்டுகோளை ஏற்று காரைக்காலுக்கு மத்தியக்குழு வருகிறது


நாராயணசாமியின் வேண்டுகோளை ஏற்று காரைக்காலுக்கு மத்தியக்குழு வருகிறது
x
தினத்தந்தி 24 Nov 2018 3:45 AM IST (Updated: 24 Nov 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சர் நாராயணசாமியின் வேண்டுகோளை ஏற்று மத்தியக்குழு காரைக்கால் பகுதியையும் பார்வையிடுகிறது.

புதுச்சேரி,

கஜா புயலால் தமிழகத்தை சேர்ந்த நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் நாகப்பட்டினம் அருகே உள்ள காரைக்கால் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன. மீன்பிடி கலன்கள், வலைகள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சேத மதிப்பு ரூ.187 கோடியாக இருக்கும் என்று புதுவை அரசு கணக்கிட்டுள்ளது.

புயல் தாக்கியதும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் முதல்–அமைச்சர் நாராயணசாமியை தொடர்புகொண்டு பேசினார். அப்போது புதுவைக்கு இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்று அவரிடம் முதல்–அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்தார். மேலும் புயல் சேதங்களை பார்வையிட மத்தியக்குழுவையும் காரைக்காலுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல்–அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்றார். அங்கு புயல் சேதங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது புயல் சேதங்கள் தொடர்பாக விளக்கம் அளித்த அவர் காரைக்காலை பார்வையிட மத்தியக்குழுவை அனுப்பிட கோரிக்கை வைத்தார்.

ஏற்கனவே மத்திய அரசு புயல் சேதங்களை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் குழு ஒன்று தமிழகம் வந்துள்ளது. முதல்–அமைச்சர் நாராயணசாமியின் வேண்டுகோளை ஏற்று இந்த குழுவினர் காரைக்கால் பகுதியையும் பார்வையிட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story