கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களிலும் சீரமைப்பு பணிகளில் 20 ஆயிரத்து 295 பணியாளர்கள் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களிலும் சீரமைப்பு பணிகளில் 20 ஆயிரத்து 295 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்,
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசும் போது கூறியதாவது:-
கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. சாலைகளில் கிடந்த மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து கிராமங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளுக்கும் விரைவாக மின்வினியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் 5 ஆயிரத்து 358 மின்வாரிய பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வேதாரண்யம் பகுதியில் மின்கம்பங்கள் நடும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. கிராமங்களில் ஜெனரேட்டர்கள் உதவியுடன் இரவு நேரங்களில் மின்வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்குவதில் சிரமமோ, சமையல் பொருட்கள் பற்றாக்குறையோ ஏற்பட்டால், உடனடியாக அவர்களுக்கு உணவு வழங்கும் வகையில் மாவட்டத்தில் 3 இடங்களில் மைய உற்பத்தி நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புயலால் சுமார் 1 லட்சத்து 9 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதில் 45 ஆயிரம் மின் கம்பங்கள் புதிததாக நடப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் தகவல் தொடர்பு கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்டுள் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் மொத்தம் 20 ஆயிரத்து 295 பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் சி.சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், பெஞ்சமின், நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மைத்துறை முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங் பேடி, மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இயக்குனர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story