டெங்கு கொசு ஒழிப்பு பணி: வில்லாபுரம் பகுதியில் கலெக்டர் ஆய்வு
மதுரை மாநகராட்சி வில்லாபுரம் பகுதிகளில் கலெக்டர் டெங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
மதுரை,
மதுரை மாநகராட்சி வில்லாபுரம் பகுதிகளில் கலெக்டர் நடராஜன் டெங்கு ஆய்வு பணிகளை நேற்று மேற்கொண்டார். அப்போது அவர் அந்த பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகள் சுத்தமாக இருக்கிறதா என்பது குறித்தும், மொட்டைமாடி மற்றும் கழிவுநீர் கால்வாய் பகுதிகளில் டெங்கு நோயை ஏற்படுத்தும் கொசுப்புழுக்கள் இருக்கிறதா எனவும் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
அனைவரும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கழிவுநீர் ஏதும் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வீட்டின் மாடி மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும். தண்ணீர் பானையை மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.