அன்னவாசல் பகுதியில் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவர்கள்
அன்னவாசல் பகுதியில் பெய்த மழையில் நனைந்தபடி மாணவ, மாணவிகள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்றனர்.
அன்னவாசல்,
கஜா புயல் தாக்கியதில் அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் வளாகங்களில் உள்ள மரங்கள் சாய்ந்தன. மேலும் பள்ளி கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் போன்றவை சேதமடைந்தன. புயல் தாக்கி 8 நாட்கள் ஆகியும் ஒரு சில பள்ளிகளில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்படவில்லை. சில பள்ளிகளில் வளாகத்திற்குள் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புயலுக்கு பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகளுக்கு ஏராளமான மாணவர்கள் வரவில்லை. மேலும் சில பள்ளிகளில் மாணவர்கள் வெளியில் அமர்ந்து படித்தனர். சில பள்ளிகளில் மாணவர்கள் குடிப்பதற்கு குடிநீர் வசதியின்றி சிரமப்பட்டனர். சேதமடைந்த வகுப்பில் இருந்த மாணவர்கள் மதியத்துடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
நேற்றும் பள்ளிகள் செயல்பட்டன. இந்நிலையில் அன்னவாசல் பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்தது. இதனால் ஒரு சில பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மதியமே வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதனால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர். ஒரு சில மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பைகளை தலையில் அணிந்தபடியும், தட்டுகளை தலையில் வைத்தபடியும் சென்றதை காண முடிந்தது.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், புயலால் பள்ளிகள் கட்டிடங்கள் சேதமடைந்தும், குடிநீர் கூட கிடைக்காத நிலையிலும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்றே தெரியவில்லை. சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டும் என்று கூறினர்.
Related Tags :
Next Story