திண்டுக்கல் அருகே சிறுமலையில்: மழையால் உருக்குலைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி மறியல்
திண்டுக்கல் அருகே சிறுமலையில் மழையால் உருக்குலைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
‘கஜா’ புயல் கடந்த வாரம் தமிழகத்தை புரட்டி போட்டது. அந்த புயலின் தாக்கம் திண்டுக்கல் மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. கொடைக்கானல், சிறுமலை, ஆடலூர், பாச்சலூர், பெரும்பாறை, தாண்டிக்குடி பகுதிகளில் மலைக்கிராமங்களை சூறையாடியது குறிப்பிடத்தக்கது. இதில் திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலையில் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.
மேலும் சிறுமலை, புதூர், தென்மலை, தாழக்கிடை உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் 5 நாட்களுக்கு மேலாக சிறுமலை இருளில் மூழ்கியது. மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சரிசெய்து, மின்சாரத்தை வழங்கினர். ஆனால், இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே பழையூர், தென்மலை, தாழக்கிடை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே சாலைகள் சேதமாகி இருந்தன. அவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் புயலின் போது பெய்த கனமழையால் அங்குள்ள சாலைகளில் ஓடை போன்று மழைநீர் ஓடியது. இதனால் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் முற்றிலும் உருக்குலைந்து விட்டன. தார்சாலை இருந்த தடமே தெரியாத அளவுக்கு கரடுமுரடு பாதையாக காட்சி அளிக்கின்றன.
இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் அனைத்து தேவைக்கும் சுமார் 25 கி.மீ. தூரம் பயணித்து திண்டுக்கல்லுக்கு தான் வரவேண்டும். ஆனால், சாலைகள் சேதமானதால் பஸ்கள் இயல்பாக சென்று வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களிலும் சென்றுவர முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இதனால் கிராம மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பழையூர் பகுதியில் திரண்டனர். பின்னர் சாலைகளை சீரமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்களையும் தடுத்து நிறுத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை, வனத்துறை, போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சேதமான அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். முறையாக மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சேதமான சாலைகளை விரைவாக சீரமைக்கவும், சீராக மின்சாரம் வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறுமலை-திண்டுக் கல் இடையே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story