‘கஜா’ புயலால் பலத்த மழை: கொடைக்கானல் பழைய அணை நிரம்பியது
‘கஜா’ புயல் மழை காரணமாக கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணை நிரம்பி உபரிநீர் வெளியேறியது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் மண்அணை கட்டப்பட்டது. இந்த அணை 21 அடி கொள்ளளவு கொண்டது. சமீபத்தில் வீசிய ‘கஜா’ புயலின் காரணமாக பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த ஒரு வார காலத்தில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்தது. இதனால் அணை முழுகொள்ளளவை எட்டிய துடன், நேற்று உபரிநீர் வெளியேறியது. அதேபோல புதிய அணையான மனோரஞ்சிதம் அணை 34 அடியாக (மொத்த உயரம் 36 அடி) உயர்ந்தது.
ஒரு ஆண்டுக்கு பிறகு பழைய அணை நிரம்பி வழிந்ததை தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் முருகேசன் மலர்தூவி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் சேகர், வருவாய் ஆய்வாளர் சரவணன் உள்பட நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து ஆணையாளர் முருகேசன் நிருபர் களிடம் கூறுகையில், ‘பழைய அணை தனது முழு கொள்ளளவான 21 அடியை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. அதேபோல புதிய அணையின் நீர்மட்டம் 34 அடியாக உள்ளது. இந்த அணையும் ஓரிரு நாட்களில் நிறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தண்ணீரின் மூலம் அடுத்த 8 மாதங்களுக்கு நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். சீசன் காலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றார்.
கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகள் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story