சாணார்பட்டி அருகே துணிகரம்: கட்டிட தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு


சாணார்பட்டி அருகே துணிகரம்: கட்டிட தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 23 Nov 2018 9:45 PM GMT (Updated: 23 Nov 2018 9:32 PM GMT)

சாணார்பட்டி அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோபால்பட்டி, 

சாணார்பட்டி அருகே உள்ள பஞ்சம்பட்டியை சேர்ந்தவர் முத்துகருப்பையா (வயது 42). அவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இருவரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுடன், முத்துகருப்பையாவின் அக்கா சின்னப்பொண்ணு (55) வசித்து வருகிறார். சம்பவத்தன்று முத்துகருப்பையாவும், பாக்கியலட்சுமியும் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் சின்னப்பொண்ணு மட்டும் தனியாக இருந்தார்.

பின்னர் சின்னப்பொண்ணுவும் வீட்டை பூட்டி சாவியை கதவின் மேற்பகுதியில் வைத்துவிட்டு ஆடு மேய்க்க சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து, அதில் வைத்திருந்த நகைகளை திருடி கொண்டு தப்பி சென்றனர்.

பின்னர் மதிய வேளையில் சின்னப்பொண்ணு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது துணிமணிகள், பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர் களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்து கொண்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story