கஜா புயலால் தென்னை மரங்கள் சாய்ந்தன: தேங்காய், மட்டை, ஓலைகள் அழுகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் - அரசு உதவ விவசாயிகள் எதிர்பார்ப்பு
கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்கள் அகற்றப்படாததால் தேங்காய், மட்டை, ஓலைகள் அழுகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றை அகற்ற அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சாவூர்,
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் பிரதான தொழிலே விவசாயம். தென்னை, வாழை, முந்திரி, நெல், சோளம், மல்லிகை போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. பிள்ளையை பெற்றால் கண்ணீர். தென்னையை வைத்தால் இளநீர் என்பது பழமொழி. பிள்ளைகள் கூட பெற்றோரை கைவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தென்னை வைத்தவர்களை தென்னை மரங்கள் என்றைக்கும் கைவிடாது. அந்த அளவுக்கு தென்னை மரங்களில் எதுவும் வேண்டாதவை என கூற முடியாது.
இளநீர் மக்களுக்கு தாகத்தை தணிக்கிறது. தேங்காய், சமையலுக்கு மட்டுமின்றி எண்ணெய் தயாரிக்கவும் பயன்படுகிறது. தென்னை மட்டை நார், கயிறு தயாரிக்கவும், ஓலைகள் கீற்றுக்கள் பிண்ணுவதற்கும் பயன்படுகிறது. தென்னை மரங்களில் காய்ப்பு முடிந்தால் அவற்றை வெட்டி மரப்பலகைகள் தயாரிக்கவும், தென்னங்குருத்துக்கள் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னையை பயன்படுத்தி மதிப்பு கூட்டு பொருட்களும் தயாரிக்கப்படுகிறது.
இப்படி எதையும் ஒதுக்கி வைக்க முடியாத அளவுக்கு தென்னை மரங்கள் விவசாயிகளுக்கு பயன்படுகிறது. விவசாயிகள் மட்டுமின்றி தென்னையை நம்பி தொழிலாளர்கள், வியாபாரிகள், இடைத்தரகர்கள், பொதுமக்களும் உள்ளனர். இப்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் தென்னை மரங்கள் பயன்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், மதுக்கூர், திருச்சிற்றம்பலம், ஒரத்தநாடு, திருவோணம் பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு நெற்பயிர்கள் தான் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டன. கல்லணைக்கால்வாய் பாசனத்தை நம்பி நெற்பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள், தண்ணீர் வரத்து குறைந்ததாலும், உரம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் படிப்படியாக தென்னை சாகுபடிக்கு மாறினர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
தேக்கு, மா, வேப்பமரம் போன்றவற்றையும் ஊடுபயிராக நட்டு விவசாயிகள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தினர். கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அமோக விளைச்சலை தென்னை மரங்கள் அளித்தன. மும்பை மற்றும் வெளிநாடுகளுக்கும் முதல்தர தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இப்படி மகிழ்ச்சியாக இருந்த தென்னை விவசாயிகளின் வாழ்வை ஒரே நாள் இரவில் கஜா புயல் மாற்றிவிட்டது. கஜா புயலால் டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு இருக்கிறது.
தலைமுறைகள் தாண்டிய விவசாயத்தை, வருடங்கள் கடந்த உழைப்பை ஒற்றை இரவில் கஜா புயல் சுருட்டி கொண்டு போய் இருக்கிறது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. ஆசையாக வளர்த்த தென்னை மரங்கள் சாய்ந்து கிடப்பதை கண்டு, வீட்டில் ஒருவன் தன்னை விட்டு போய்விட்டானே என்ற அதிர்ச்சியில் இருந்து இன்னும் விவசாயிகளால் மீள முடியவில்லை. ஆங்காங்கே சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை 8 நாட்கள் கடந்தும் எப்படி அகற்றுவது என்று விழிபிதுங்கி நிற்கின்றனர்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
இந்தநிலையில் கனமழை பெய்து வருவதால் தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கும் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இளநீர், தேங்காய், மட்டை, ஓலை போன்றவை அழுக தொடங்கி இருக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மும்பையில் புயல் தாக்கியபோது எந்திரங்களை கொண்டு தென்னை மரங்களை தூள், தூளாக பவுடர் போல் மாற்றி அழித்ததை போல் டெல்டா மாவட்டங்களிலும் அழிக்க தமிழகஅரசு முன்வர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
இது குறித்து தென்னை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் குருவிக்கரம்பை வைரவன் கூறியதாவது:-
நாங்கள் மீள முடியாத அளவுக்கு கஜா புயல் எங்களை ஒரே அடியாக சாய்த்து விட்டது. நான் 15 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்து இருக்கிறேன். 1 ஏக்கருக்கு 75 மரங்கள் வீதம் வளர்ந்துள்ளன. இவற்றில் 80 சதவீத மரங்கள் சாய்ந்துவிட்டன. மீதமுள்ள 20 சதவீத மரங்களிலும் குருத்து ஓடிந்துவிட்டது. அந்த மரங்களில் தேங்காய் காய்க்காது. அவற்றையும் வெட்ட வேண்டிய நிலையில் தான் உள்ளோம். தென்னை மரங்களால் நேரடியாக விவசாயிகளும் மறைமுகமாக தென்னங்கீற்று முடையும் தொழிலாளர்கள், கயிறு தயாரிக்கும் உரிமையாளர்கள், வியாபாரிகள், இடைத்தரகர்கள், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்னையில் எதையும் வேண்டாம் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அனைத்தும் பயனுள்ளவை. தேங்காய்களில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து நாகை, காரைக்கால் பகுதிகளுக்கு தென்னங்கீற்றுகள் அனுப்பி வைக்கப்படும். இதனால் தென்னங்கீற்று முடையும் முதியோர்கள், பெண்கள் வீட்டில் இருந்து வருமானம் பெற்று வந்தனர். இப்படி எல்லோருக்கும் வருமானத்தை ஈட்டி வந்த தென்னை மரங்கள் இன்றைக்கு அடியோடு சாய்ந்துவிட்டன.
பொள்ளாச்சி, காங்கேயம் பகுதிகளுக்கு சென்று தேங்காய் வாங்கும் வியாபாரிகள் ரொக்க பணத்தை கொடுக்க வேண்டும். ஆனால் பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் கடனுக்கு தான் தேங்காய் வாங்கி செல்வார்கள். இப்போது அந்த வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்னை மூலம் வந்த வருமானத்தை வைத்து தான் குடிசை வீட்டில் இருந்தவர்கள் கூட மாடி வீட்டிற்கு வந்தோம். எங்களது பிள்ளைகளை எல்லாம் படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தோம். இப்போது புயலால் சாய்ந்த தென்னை மரங்களை எப்படி அகற்ற வேண்டும் என்று தெரியவில்லை. மழைநீரில் தென்னை மரங்கள் அழுகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இவைகளை அகற்ற விவசாயிகளுக்கு உதவ தமிழகஅரசு முன்வர வேண்டும். வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story