பெங்களூருவில் இந்திரா உணவகத்தில் பரமேஸ்வர் திடீர் ஆய்வு
பெங்களூருவில் இந்திரா உணவகத்தில் திடீரென துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆய்வு செய்தார்.
பெங்களூரு,
பெங்களூருவில் இந்திரா உணவகத்தில் திடீரென துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆய்வு செய்தார்.
இந்திரா உணவகத்தில் ஆய்வு
துணை முதல்-மந்திரி பரமேஸ்வா் நேற்று பெங்களூருவில் திடீரென இந்திரா உணவகம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மேயர் கங்காம்பிகே, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். முதலில் தேவசந்திராவில் உள்ள இந்திரா உணவகத்திற்கு சென்று ஆய்வு செய்த பரமேஸ்வர், அங்கு 10 ரூபாய் கொடுத்து உணவு வாங்கி சாப்பிட்டார்.
அப்போது, அந்த உணவகத்தில் உணவு சாப்பிட்டவர்களிடம் பரமேஸ்வர் உணவு வகைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். அதற்கு அவர்கள், உணவின் தரம் பரவாயில்லை என்று திருப்தி தெரிவித்தனர். மேலும் அங்கு சமையல் தயாரிப்பு கூடத்தை பரமேஸ்வர் ஆய்வு செய்தார்.
மகப்பேறு ஆஸ்பத்திரியில்...
அங்கு ஓரளவுக்கு தூய்மை பராமரிக்கப்பட்டிருந்தது. இதற்கு பரமேஸ்வர் அந்த ஊழியர்களை பாராட்டினார். அதை முடித்துக் கொண்டு பரமேஸ்வர், அருகில் இருந்த பொது நூலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு தினமும் எத்தனை பேர் புத்தகம் படிக்கிறார்கள் என்ற விவரங்களை கேட்டறிந்தார்.
அதன் பிறகு ஹெப்பால் வெளிவட்டச்சாலையில் நடைபெற்று வரும் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளை பரமேஸ்வர் ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கங்காநகரில் உள்ள மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
சிகிச்சை முற்றிலும் இலவசம்
இந்த ஆய்வுக்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திரா உணவகங்களில் உணவு தரமாக இல்லை என்று புகார் வந்தது. இதையடுத்து அங்கு நான் நேரில் ஆய்வு செய்தேன். நானும் அங்கு உணவு வாங்கி சாப்பிட்டேன். அங்கு உணவு தரமாகவும், ருசியாகவும் உள்ளதை அறிந்தேன். கங்காநகரில் மாநகராட்சி சார்பில் மகப்பேறு ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டது. அது தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
முன்கூட்டியே சொல்லிவிட்டு, ஆய்வுக்கு சென்றால் ஊழியர்கள் முன்னேற்பாடுகளை செய்து கொள்கிறார்கள். இதனால் குறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் திடீரென ஆய்வு செய்தேன். இனி வரும் நாட்களில் இதுபோன்று திடீரென ஆய்வு பணிகளை மேற்கொள்வேன்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
Related Tags :
Next Story