ராமர் கோவில் கட்டும் விவகாரம் உத்தவ் தாக்கரே இன்று அயோத்தி பயணம் தொண்டர்களும் குவிந்ததால் பரபரப்பு
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அயோத்தி செல்கிறார். அங்கு தொண்டர்களும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
அயோத்தி,
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அயோத்தி செல்கிறார். அங்கு தொண்டர்களும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
அயோத்தி பயணம்
மத்திய மற்றும் மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் சிவசேனா அங்கம் வகிக்கிறது. கூட்டணியில் இடம் பெற்றுக் கொண்டே பல்வேறு பிரச்சினைகளில் பா.ஜனதாவை விமர்சிக்கும் சிவசேனா தற்போது அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்து உள்ளது.
தான் அயோத்தி செல்ல இருப்பதாகவும், அப்போது ராமர் கோவில் கட்டுவதில் ஏற்படும் தாமதம் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்புவேன் என்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரே இன்று (சனிக்கிழமை) அயோத்தி செல்கிறார். உத்தவ் தாக்கரே பயணத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும் ரெயில் மூலம் கடந்த 2 நாட்களாக அயோத்தி புறப்பட்டு சென்றனர். அவர்கள் அங்கு திரண்டு உள்ளனர். இதனால் அயோத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சஞ்சய் ராவுத் எம்.பி. பேட்டி
முன்னதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் நேற்று அயோத்தி சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை ராம பக்தர்கள் வெறும் 17 நிமிடங்களில் இடித்து விட்டனர். என்ன செய்ய வேண்டுமோ, அதை அரை மணி நேரத்துக்குள் செய்து முடித்து விட்டனர்.
ஆனால், அங்கு ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வருவதற்கு எவ்வளவு நாளாகும்? ஜனாதிபதி மாளிகையில் இருந்து உத்தரபிரதேச சட்டசபை வரை இதற்கான ஏற்பாடுகளை செய்ய எவ்வளவு காலம் ஆகும்? இரண்டு இடங்களிலும் பா.ஜனதா அரசுகள்தான் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் பா.ஜனதாவை மறைமுகமாக விமர்சித்து தலையங்கம் எழுதப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேதியை அறிவியுங்கள்
பால்தாக்கரே உத்தரவுப்படி, அயோத்தியில் பாபர் ராஜ்யத்தை சிவசேனா தொண்டர்கள் அகற்றினர். அவர்களை பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் பயமோ, பொறாமையோ கொள்ள வேண்டாம். பெருமைப்படுங்கள்.
நாங்கள் ராமர் பெயரை சொல்லி, ஓட்டுக்காக பிச்சை பாத்திரம் ஏந்தியது இல்லை. தேர்தலின்போது, வார்த்தை ஜாலத்தில் ஈடுபட்டது இல்லை. ஆனால், நாங்கள் அயோத்திக்கு செல்கிறோம் என்றவுடன், இந்துத்துவா ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுவது ஏன்? நாங்கள் அரசியல் நோக்கத்துடன் அங்கு செல்லவில்லை.
அது, எவருடைய தனிப்பட்ட இடமும் அல்ல. எனவே, எங்கள் மீது சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, ராமர் கோவில் கட்ட தேதியை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story