பேத்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு


பேத்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 24 Nov 2018 4:51 AM IST (Updated: 24 Nov 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

பேத்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கடலூர்,

பெண்ணாடம் மேலபெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(வயது 63). இவர் கடந்த 23.1.2017 அன்று இரவு 7 மணிக்கு பேத்தி உறவுமுறையுள்ள 13 வயது சிறுமியை தான் புதிதாக கட்டி வந்த வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

பின்னர் இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் உன்னையும், உன் அம்மாவையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன சிறுமி நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறவில்லை.

அந்த சிறுமி அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தாள். அவள் தினமும் வீட்டில் இருந்து சைக்கிளில் பெண்ணாடம் பஸ் நிறுத்ததுக்கு வந்து சைக்கிளை அங்கே நிறுத்தி வைத்துவிட்டு பின்னர் பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தாள்.

அதன்படி 17.3.2017 அன்று மாலை சிறுமி பெண்ணாடம் பஸ் நிறுத்தத்தில் இருந்து சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். சங்கரநாராயணன் புதிதாக கட்டி வந்த வீட்டின் அருகே வந்தபோது சாலையில் கிடந்த மின்சார ஒயர் சைக்கிளில் சிக்கியதால் சிறுமி கீழே விழுந்தாள். அங்கே நின்று கொண்டிருந்த சங்கரநாராயணன் இதைப்பார்த்து சிறுமியை தூக்கி விடுவதுபோல் அவளுக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது பற்றி அந்த சிறுமி அவளது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரநாராயணனை கைது செய்து அவர் மீது கடலூர் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றவாளி சங்கரநாராயணனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக செல்வபிரியா ஆஜர் ஆனார்.

கடலூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று குற்றவாளிக்கு தண்டனை விவரம் தெரிவித்த நீதிபதி

பேத்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சங்கரநாராயணன் மீதான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சங்கரநாராயணன் குற்றவாளி என்று நீதிபதி லிங்கேஸ்வரன் கூறினார். இதை கேட்டதும் அவர் கோர்ட்டிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள், சங்கரநாராயணனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சங்கரநாராயணனுக்கான தண்டனை விவரம் 23-ந் தேதி(அதாவது நேற்று) கூறப்படும் என்று நீதிபதி கூறினார். அதன்படி நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று மாலை கடலூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சங்கரநாராயணனை சந்தித்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரத்தை தெரிவித்தார்.



Next Story