பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பலத்த மழை: ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பலத்த மழை: ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 23 Nov 2018 9:45 PM GMT (Updated: 23 Nov 2018 11:23 PM GMT)

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பலத்தமழை பெய்தது. இதனால் ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

பெரம்பலூர், 


கடந்த வாரம் ‘கஜா’ புயல் கரையை கடந்ததில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது பலத்த மழையும், லேசான மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. ஆனால் நேற்று காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று காலை 11.30 மணியளவில் இடி, மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை வெளுத்து வாங்கியது. விடாமல் சுமார் 4 மணி நேரம் கனமழையாக கொட்டி தீர்த்தது.

பின்னர் அவ்வப்போது சடசடவென ஆரம்பித்து, சில நிமிடங்களில் நின்று போவதும், பின் மழை பெய்வதுமாக இருந்தது. இதேபோல் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. நேற்று பகல் நேரத்தில் பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கின. கனமழையால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மழை கோட் அணிந்து சென்றதை காண முடிந்தது.

வானில் கருமேகங்கள் சூழந்து பகல் பொழுது இரவு போலவே காணப்பட்டதால் சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர். மேலும் மழையில் பொதுமக்கள் குடைபிடித்தபடியே சென்றனர். மாலை நேரத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவ- மாணவிகள் நனைந்தபடியே சென்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் கல்லாறு, கோரையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் விசுவக்குடி அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் மழைநீர் நிரம்பி வருகிறது. மழை பெய்யும் போது காற்று வீசியதால், பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பங்களில் 2 மின்கம்பங்கள் சாய்ந்தன. நேற்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை 11 மணியளவில் பெய்ய தொடங்கிய கனமழை மாலை 4 மணி வரை விடாமல் பெய்தது. பின்னர் அவ்வப்போது விட்டு, விட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. இதனால் அரியலூரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. அரியலூரில் உள்ள செட்டி ஏரி, சந்தன ஏரி, துரை ஏரி ஆகியவை நேற்று பெய்த மழையினால் நிரம்பின. மேலும் அந்த ஏரிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.

மருதையாற்றில் இருகரையும் தொட்டபடியே செம்மண் நிறத்தில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் திருமழப்பாடி சாலையில் வண்ணம்புத்தூர் கிராமம் அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி மழைநீர் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவிகள் பஸ்களில் இருந்து இறங்கி நடந்து சென்றனர்.

வாரணவாசி கிராமத்தில் உள்ள புவியியல் அருங்காட்சியக கட்டிடத்தை சுற்றி மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. மாலை வரை பெய்த மழையால் பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவ- மாணவிகள் நனைந்தபடியே சென்றனர்.

விக்கிரமங்கலத்தில் கருப்பனார் கோவில் தெருவில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று பெய்த கனமழையால் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அங்குள்ள மக்கள் வீடுகளில் இருந்த ஒரு சில பொருட்களை எடுத்து வேறு இடத்திற்கு மாற்றினர். இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அரியலூர்-95, ஜெயங்கொண்டம்-54, திருமானூர்-52, செந்துறை-44.

Next Story