புனேயில் நகைக்கடை ஊழியர் சுட்டுக்கொலை 4 பேருக்கு வலைவீச்சு


புனேயில் நகைக்கடை ஊழியர் சுட்டுக்கொலை 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Nov 2018 5:12 AM IST (Updated: 24 Nov 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் நகைக்கடை ஊழியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

புனே, 

புனேயில் நகைக்கடை ஊழியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

நகைக்கடை ஊழியர் சுடப்பட்டார்

புனே எவ்லேவாடி பகுதியில் மான்சிங் கவடே என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த கடையில் ராஜஸ்தானை சேர்ந்த அம்ரத் பாரிஹர்(வயது27) என்பவர் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் மட்டும் கடையில் இருந்தார். அப்போது, 4 பேர் கடைக்கு வந்தனர்.

அவர்களில் 2 பேர் கையில் துப்பாக்கி வைத்திருந்தனர்.

திடீரென அவர்களில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அம்ரத் பாரிஹர் மீது சுட்டார். இதில் அவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது.

பரிதாப சாவு

இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம்கேட்டு ஓடிவந்த பக்கத்து கடைக்காரர்கள் அம்ரத் பாரிஹர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சசூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் கடையில் இருந்த நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை. எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் 4 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story