ஆரணி காய்கறி மார்க்கெட்டில் மீண்டும் 6 கடைகள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு வியாபாரிகள், பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
தொடர் மழை காரணமாக ஆரணி காய்கறி மார்க்கெட்டில் மீண்டும் 6 கடைகள் இடிந்து விழுந்தன. அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
ஆரணி,
ஆரணி, காந்தி ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு வாடகை அடிப்படையில் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள கட்டிடங்கள் பழுதான நிலையில் இருந்ததால் நகராட்சி மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டது. இதனையடுத்து வியாபாரிகளிடம் கடைகளை காலி செய்யும்படி அதிகாரிகள் தகவல் அனுப்பினர்.
ஆனால் எங்களுக்கே கடையை ஒதுக்க வேண்டும். நாங்களே எங்கள் கடைகளை சீரமைத்துக்கொள்கிறோம் என அமைச்சரிடமும், கலெக்டரிடமும் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். சிறிது காலத்திற்கு புதிய கடைகள் கட்டும்வரை ஒப்புதல் அளிப்பதாக நகராட்சி அலுவலர்கள் வாய்மொழியாக தெரிவித்தனர்.
ஆனால் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கடைகளை மீண்டும் வாடகைதாரர்களிடம் ஒப்படைக்க முடியாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் பலத்த மழை காரணமாக காய்கறி மார்க்கெட்டில் 3 கடைகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
அதன்பின்னரும் கடைகளை வியாபாரிகள் காலி செய்யவில்லை. கடந்த 3 தினங்களாக ஆரணியில் தொடர்மழை பெய்தது. இதில் காய்கறி கடைகளின் சுவர்கள் மேலும் வலுவிழந்தன. இந்த நிலையில் நேற்று காய்கறி மார்க்கெட் வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருந்தது.
மாலை 5.30 மணியளவில் முதல் வரிசையில் சதக்பாஷா, உசேனி, வெங்கடேசன், சம்சித், கலிமுல்லா, சரவணன் ஆகிய 6 பேர் நடத்தி வந்த கடைகளின் மேற்கூரைகள் இடிந்து தரைமட்டமானது.
அருகில் கடை வைத்திருந்த வியாபாரிகள் மற்றும் காய்கறி வாங்க வந்திருந்த பொதுமக்கள் இதனை பார்த்து அலறியடித்து தப்பி ஓடினர். நல்ல வேளையாக எந்த விபரீதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்த தாசில்தார் கிருஷ்ணசாமி, வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், வருவாய் ஆய்வாளர் தேவராஜ், பொறியாளர் கணேசன் ஆகியோர் இடிந்த கடைகளையும் மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து காய்கறி வியாபாரிகள் “இந்த கடைகள் வியாபாரம் செய்ய தகுதியற்ற இடமாக உள்ளது. எனவே நாங்களே கடைகளை நகராட்சியிடம் ஒப்படைக்கிறோம்” என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story