படித்த வேலை வாய்ப்பற்றவர்களுக்கு நேர்காணல்


படித்த வேலை வாய்ப்பற்றவர்களுக்கு நேர்காணல்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:00 AM IST (Updated: 24 Nov 2018 10:32 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்றவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் நடக்கிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தீன்தயாள் உபத்யாய கிராமீன் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்களின் மூலம் இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு தீன் தயாள் உபத்யாய கிராமீன் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்களின் மூலம் இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பிற்கான நேர்காணல் நாளை (திங்கட்கிழமை) பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 29-ந் தேதி வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளை சேர்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். சென்னை மற்றும் காஞ்சீபுரம் போன்ற பல நகரங்களில் செயல்பட்டு வரும் பென்சன் மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் வளர்ச்சி சங்கம், திருப்பூர் ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி நிறுவனம் போன்ற பல்வேறு நிறுவனங்களின் மூலம் டேலி, தையல் பயிற்சி, எலக்ட்ரீசியன், பியூட்டிசியன், நர்சிங், வேளாண் உற்பத்தி பொருட்கள் தயாரித்தல், கணினி ஹார்டுவேர் உதவியாளர், டிசைன் என்ஜினீயர், பேசன் டிசைனர் போன்ற பல்வேறு பயிற்சிகள், 6 மாத காலம் வரை உண்டு உறைவிட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவு, தங்குமிடம், சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.

மேற்படி பயிற்சிக்கு 1,130 நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதால் 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இருபாலரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டையின் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு உதவித்திட்ட அலுவலர் அலுவலகத்தை 9444094325 என்ற செல்போன் எண்ணிலும், மகளிர் திட்ட அலுவலகத்தை 04328- 225362 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story