தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஒட்டில் தடுப்பணை அமைக்க ஆய்வு அதிகாரிகளுடன், செங்குட்டுவன் எம்.எல்.ஏ. ஆலோசனை


தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஒட்டில் தடுப்பணை அமைக்க ஆய்வு அதிகாரிகளுடன், செங்குட்டுவன் எம்.எல்.ஏ. ஆலோசனை
x
தினத்தந்தி 25 Nov 2018 4:30 AM IST (Updated: 24 Nov 2018 10:48 PM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஒட்டு என்னும் இடத்தில் தடுப்பணை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தி.மு.க. எம்.எல்.ஏ. செங்குட்டுவன் ஆலோசனை நடத்தினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஒட்டு என்ற இடத்தில் தடுப்பணை கட்டி, வலது மற்றும் இடதுபுற கால்வாய் மூலம் மாவட்டத்தில் உள்ள 200 ஏரிகளுக்கு தண்ணீர் விடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல எண்ணேகொல்புதூர் தடுப்பணை மூலம் இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் விடவேண்டும் என்றும் விவசாயிகளில் ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செங்குட்டுவன் (தி.மு.க.), தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ராமகவுண்டர், பொதுப்பணித்துறை அலுவலர் அறிவழகன் ஆகியோர் வாணிஒட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து செங்குட்டுவன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் வாணிஒட்டில் தடுப்பணை கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டு, சர்வே பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. 8 ஆண்டுகளாக பணிகள் மேற்கொள்ளாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் தடுப்பணை கட்டி ஏரிகளுக்கு தண்ணீர் வழங்காமல், எண்ணேகொல்புதூரில் தடுப்பணை கட்டி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் தீட்டி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் கிருஷ்ணகிரி அணையின் கத்தேரி மலை வழியாக 15 கிலோ மீட்டர் தூரம் யாருக்கும் பயன்இல்லாமல் போகும். விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் சுயலாபம் மறந்து பொதுநலம் கருதி, அனைத்து பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள், கிராம மக்கள் உடனிருந்தனர்.


Next Story