தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை கழுகுமலையில் வீடு இடிந்தது


தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை கழுகுமலையில் வீடு இடிந்தது
x
தினத்தந்தி 25 Nov 2018 3:30 AM IST (Updated: 25 Nov 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. கழுகுமலையில் வீடு இடிந்து விழுந்தது.

தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. கழுகுமலையில் வீடு இடிந்து விழுந்தது.

பலத்த மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி நகர் பகுதி, முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகளில் காலையில் லேசான மழை பெய்தது.

தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 2 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் பலத்த மழை சுமார் அரை மணி நேரம் பெய்தது. நாசரேத், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை சுமார் அரை மணி நேரம் பெய்தது. திருச்செந்தூரில் மாலையில் பலத்த மழை சிறிதுநேரம் பெய்தது.

வீடு இடிந்தது

கழுகுமலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. கழுகுமலை கிட்டங்கி தெருவைச் சேர்ந்தவர் பட்டமுத்து (வயது 39). லாரி டிரைவர். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டு வீட்டில் வசித்தனர். நேற்று காலையில் பட்டமுத்து வேலைக்கு சென்று விட்டார். மதியம் மாரியம்மாள் தன்னுடைய 2 மகள்களுடன் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென்று வீடு இடிந்து விழுந்தது. உடனே மாரியம்மாள் தன்னுடைய 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சேதம் அடைந்த வீட்டை வருவாய் துறையினர் பார்வையிட்டு, நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்தனர்.

Next Story