தொழிற்சாலைகள் பாதுகாப்பில் முன்னிலை வகிப்பதால் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்


தொழிற்சாலைகள் பாதுகாப்பில் முன்னிலை வகிப்பதால் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:15 AM IST (Updated: 25 Nov 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் தொழிற்சாலை பாதுகாப்பில் முன்னிலை வகிப்பதால் இங்கு தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் மனோகரன் தெரிவித்தார்.

கோவை,

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பாதுகாப்பு குழுமம், கோவை மண்டல குழு ஆகியவை இணைந்து ‘என்ஜினீயரிங் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்’ என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு கோவை கே.ஆர்.புரம், கோ–இந்தியா அரங்கில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்புக்கு தமிழ்நாடு அரசு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் மனோகரன் தலைமை தாங்கி பேசியதாவது:–

தொழிற்சாலைகள் பாதுகாப்பில் இந்திய அளவில் தமிழகம் முன்னிலை வகிப்பதால், தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பாதுகாப்பு என்பது சட்டமாக மட்டுமின்றி தனிமனிதனின் ஒழுக்கத்தில் இருந்து துவங்கி வாழ்வியல் கலாச்சாரமாக மாற வேண்டும். அதன் மூலம் பணியிடத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் பேசினார்.

இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் குறித்து தேசிய பாதுகாப்பு குழுவின் தமிழ்நாடு பிரிவின் துணைத்தலைவர் பாஸ்கரன் எடுத்து கூறினார். ரூட்ஸ் குழுமத்தலைவர் ராமசாமி கலந்து கொண்டு தொழிற்சாலை பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பேசினார். முன்னதாக அனைவரையும் கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ஜெகதீசன் வரவேற்றார். முடிவில் தேசிய பாதுகாப்பு குழுமத்தின் கோவை மண்டல உபகுழு ஒருங்கிணைப்பாளர் கேர்.ஆர்.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

இந்த பயிற்சி வகுப்பில் என்ஜினீயரிங் தொழிற்சாலைகளில் பின்பற்றப்பட வேண்டிய விபத்து தடுப்பு முறைகள், பணியிடத்தில் பொருட்களை முறையாக கையாளும் முறைகள், தொழிற்சாலைகளில் மின்சார பாதுகாப்பு மற்றும் பணியிடத்தில் தொழிலாளர்கள் நடத்தையின் வாயிலாக பாதுகாப்பினை மேம்பட செய்தல் ஆகியவை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டன.

முன்னதாக இதுதொடர்பாக வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலை பாதுகாப்பு கண்காட்சியினை இயக்குனர் மனோகரன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்த கையேடும் வெளியிட்டார். இந்த பயிற்சி வகுப்பில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து 300 பணியாளர்கள் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story