வெள்ளப்பெருக்கால் உடைந்த ஓங்கூர் ஆற்று தரைப்பாலம் சீரமைக்கும் பணி கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்


வெள்ளப்பெருக்கால் உடைந்த ஓங்கூர் ஆற்று தரைப்பாலம் சீரமைக்கும் பணி கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:30 AM IST (Updated: 25 Nov 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே ஓங்கூர் ஆற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உடைந்த தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிரம்மதேசம், 

மரக்காணம் அருகே உள்ள அசப்பூர் கிராமத்தின் வழியாக ஓங்கூர் ஆறு செல்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் ஓங்கூர் ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு 9 மணி அளவில் ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அசப்பூர்-ராயநல்லூர் இடையே உள்ள தரைப்பாலம் உடைந்தது. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதனால் ராயநல்லூர், நகர், நல்லாம்பாக்கம் உள்ளிட்ட 7 கிராம மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வந்தனர்.

இதையடுத்து நேற்று ஆற்றில் வெள்ளம் குறைந்ததால், தரைப்பாலம் உடைந்த இடத்தில் மணல் மூட்டைகள் போடப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேற்று அசப்பூர் பகுதிக்கு வந்து, தரைப்பாலம் சீரமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் ராயநல்லூர், நகர், அசப்பூர் போன்ற கிராமங்களின் வழியாக ஓங்கூர் ஆற்றுக்கு வரும் வாய்க்கால்களை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவும், உடைந்த தரைப்பாலத்தை பலப்படுத்தி, தடையின்றி தண்ணீர் வெளியேற அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பாலத்தை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வரவேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், மரக்காணம் தாசில்தார் தனலட்சுமி, மண்டல துணை தாசில்தார் ஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, தேவராஜன், உதவிப்பொறியாளர் ஆர்த்தி, மரக்காணம் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story