குன்னூர்– ஊட்டி சாலையில் ராட்சத மரம் விழுந்தது; போக்குவரத்து பாதிப்பு


குன்னூர்– ஊட்டி சாலையில் ராட்சத மரம் விழுந்தது; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2018 3:30 AM IST (Updated: 25 Nov 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர்–ஊட்டி சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூர்,

வங்க கடலில் ஏற்பட்ட கஜா புயலின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனைதொடர்ந்து தமிழக அரசு பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சாலையோரங்களில் உள்ள மரங்களின் வேர்கள் மண்ணின் பிடிப்பை இழந்து உள்ளன.

இந்த நிலையில் குன்னூர்–ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ் இடையே கன்டோன்மெண்ட் பொது ஆஸ்பத்திரிக்கு அருகில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று நேற்று காலை 7 மணிக்கு திடீரென்று விழுந்தது. அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் வராததால் அசம்பாவித சம்பவம் ஏற்படவில்லை. இருப்பினும் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வெலிங்டன் போலீசார், குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைதொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் ஊழியர்கள் சுப்பிரமணி, கண்ணன், சிவசங்கர், மாதேஷ், வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி அந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் காலை 8 மணிக்கு குன்னூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடங்கியது.


Next Story