தொடர் மழையால் ரங்கப்பனூர் பெரிய ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி


தொடர் மழையால் ரங்கப்பனூர் பெரிய ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 24 Nov 2018 10:45 PM GMT (Updated: 24 Nov 2018 6:51 PM GMT)

தொடர் மழையால் ரங்கப்பனூர் பெரிய ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு, 

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த 18-ந் தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோர பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களிலும், அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்ததால் உள்தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த 21-ந் தேதி முதல் நேற்று முன்தினம் மதியம் வரை 3 நாட்கள் மழை பெய்தது.

அந்த வகையில் கல்வராயன்மலை பகுதியில் பெய்த தொடர் மழையால் மல்லிகைபாடி, பொட்டியம், கல்படை ஆகிய ஆறுகளில் அதிகளவு தண்ணீர் வருகிறது. இதனால் கோமுகி அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதே போல் கல்வராயன்மலை அடிவாரத்தில் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் பெரிய ஏரியும் தொடர் மழையால் நிரம்பி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர். இந்த பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் முஸ்குந்தா ஆறு வழியாக ரங்கப்பனூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் வந்தது. இந்நிலையில் நேற்று மாலை ரங்கப்பனூர் பெரிய ஏரி நிரம்பி புளியங்கோட்டை, லக்கிநாயக்கன்பட்டி, புதுப்பட்டு, புத்திராம்பட்டு பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது.

மேலும் பாக்கம், புதூர், கடுவனூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் சம்பா சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story