கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் மாணவன் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் மாணவன் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Nov 2018 3:45 AM IST (Updated: 25 Nov 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவன் கிணற்றில் பிணமாக மிதந்தான். அவனை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, 

சங்கராபுரம் அருகே உள்ள பவுஞ்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா. இவருடைய மகன் சபீர் (வயது 14). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவன் கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்தூரில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இதற்காக அவன் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தான்.

கடந்த 22-ந்தேதி இரவு சபீர், விடுதியில் இருந்து வெளியே சென்றான். பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் அவன் விடுதிக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர் மற்றும் அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் சபீரை தேடி பார்த்தனர். இருப்பினும் அவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சபீர் பிணமாக மிதந்தான்.


இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் பிணமாக மிதந்த சபீரின் உடலை கைப்பற்றினர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த சபீரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து, சபீரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து போலீசார் சபீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு சென்றார்களா? அல்லது அவனது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story