பல்லடம் அருகே பெண் பிணத்துடன் சென்ற ஆம்புலன்ஸ்– கன்டெய்னர் லாரி மோதல்


பல்லடம் அருகே பெண் பிணத்துடன் சென்ற ஆம்புலன்ஸ்– கன்டெய்னர் லாரி மோதல்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:15 AM IST (Updated: 25 Nov 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே பெண் பிணத்துடன் சென்ற ஆம்புலன்ஸ்–கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. நடுரோட்டில் ஆம்புலன்ஸ் திரும்பி நின்றதால் அந்த வழியாக போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.

பல்லடம்,

சென்னையில் இருந்து நூல்பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலைப்புதூரில் உள்ள ஒரு மில்லுக்கு வந்தது. நூல் பண்டல்களை இறக்கி விட்டு மீண்டும் அந்த கன்டெய்னர் லாரி சென்னைக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. அந்த லாரியை நெல்லை மாவட்டம், பூலாங்குளத்தை சேர்ந்த தங்கதுரை(வயது 29) என்பவர் ஓட்டினார்.

அந்த கன்டெய்னர் லாரி நேற்று மாலை 5 மணியளவில் பல்லடம் பனப்பாளையம் பெருமாள் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் ஆம்புலன்சின் முன்பகுதி நொறுங்கியது. கன்டெய்னர் லாரி மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் நடுரோட்டில் திரும்பி நின்றது.

உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் ஆம்புலன்சில் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என தேடி பார்த்தனர். ஆம்புலன்ஸ் ஒரு பெண் பிணத்துடன் வந்த போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த டிரைவர் காங்கேயம் மூலக்கடையை சேர்ந்த பெரியசாமி மகன் சேகர்(25) என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவருடன் வந்த வெள்ளகோவில் போலீஸ்காரர் சுதாகர்(23) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடுரோட்டில் ஆம்புலன்ஸ் நின்றதால் நீண்ட நேரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெள்ளகோவில் அருகே ஒரு பி.ஏ.பி. வாய்காலில் இறந்து 5 நாட்கள் ஆன ஒரு பெண் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைப்பதற்காக காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த ஆம்புலன்ஸ் ஓட்டிய டிரைவர் சேகர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக பல்லடம் வந்த போது விபத்தில் சிக்கி இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது. காயம் அடைந்த சேகர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பல்லடம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

கோவை–திருச்சி ரோட்டில் பல்லடம் அமைந்து உள்ளது. இதனால் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து இருக்கும். திருப்பூர், பொள்ளாச்சி, தாராபுரம் உள்ளிட்ட பகுதி பஸ்களும், தென் மாவட்டங்கள், கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் பல்லடம் வழியாக தான் சென்று வருகிறது. தினமும் 50–க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இந்த வழியாக சென்று வருகின்றன.

போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் இப்படி ஆம்புலன்ஸ் டிரைவரே குடிபோதையில் வாகனத்தை இயக்கினால் பெரும் விபத்தை சந்திக்க நேரிடும். ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக தான் ஆம்புலன்ஸ் விரைந்து செல்கிறது. ஆனால் அந்த ஆம்புலன்சை ஓட்டும் டிரைவர் குடிபோதையில் இருந்தால் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளின் நிலை என்னவாகும் என அச்சமடைய செய்கிறது. எனவே ஆபத்தான காலங்களில் உயிர்களை காப்பாற்ற விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவர்கள் மது போதைக்கு அடிமையாக கூடாது. அவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். போலீசாரும் அவ்வப்போது அவர்களை கண்காணிக்க வேண்டும். குடிபோதையில் ஆம்புலன்ஸ் ஓட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story