வங்கி ஊழியர் கொலையில் கைதான மேலும் 2 சிறுவர்கள், சீர்திருத்த பள்ளியில் அடைப்பு


வங்கி ஊழியர் கொலையில் கைதான மேலும் 2 சிறுவர்கள், சீர்திருத்த பள்ளியில் அடைப்பு
x
தினத்தந்தி 25 Nov 2018 3:00 AM IST (Updated: 25 Nov 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

அம்பை அருகே வங்கி ஊழியர் கொலையில் கைதான மேலும் 2 சிறுவர்கள், சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

அம்பை, 

அம்பை அருகே வங்கி ஊழியர் கொலையில் கைதான மேலும் 2 சிறுவர்கள், சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

வங்கி ஊழியர் கொலை

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுடலை முத்துமணி மகன் இசக்கி சங்கர் (வயது 33). இவர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களக்காடு கிளையில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இசக்கி சங்கர் வழக்கம்போல் அந்த பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அவர் ஆற்றங்கரையில் நடந்து வந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் அவரை சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் இசக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

காதல் விவகாரம்

போலீசாரின் விசாரணையில், இசக்கி சங்கர் அதே ஊரில் உள்ள மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து உள்ளார். இவருடைய காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இசக்கி சங்கரை எச்சரித்தனர். அந்த பெண்ணிடம் இனிமேல் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று கூறினர்.

ஆனால் அதையும் மீறி இசக்கி சங்கர் அந்த பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்களில் சிலர் இசக்கி சங்கரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அவர் காதலித்து வந்ததாக கூறப்பட்ட பெண்ணும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெண்ணின் தம்பி உள்பட 7 சிறுவர்கள் கைது

இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, அந்த பெண்ணின் தம்பி உள்பட 5 சிறுவர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களை பாளையங்கோட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். கைதான 7 பேரில் 2 சிறுவர்கள் 10-ம் வகுப்பு மாணவர்கள், மற்றவர்கள் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story