அரக்கோணம் நகராட்சி பகுதியில் ரூ.5 கோடியில் சாலை அமைக்கும் பணிகள் டிசம்பர் 6-ந் தேதி தொடங்குகிறது


அரக்கோணம் நகராட்சி பகுதியில் ரூ.5 கோடியில் சாலை அமைக்கும் பணிகள் டிசம்பர் 6-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 25 Nov 2018 4:15 AM IST (Updated: 25 Nov 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தார், சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.

அரக்கோணம், 

அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ரூ.95 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப்பணிகள் தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் ரூ.13 கோடியே 30 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை குழாயுடன், வீட்டின் கழிவுநீர் குழாயை இணைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பணிகள் முடிந்தபின் சரிவர மூடப்படாததால் நடந்து செல்வோரும் வாகனங்களில் செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சு.ரவி எம்.எல்.ஏ, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை நேரில் சந்திந்து சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார். அவரின் கோரிக்கையை ஏற்று ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் 36 வார்டுகளின் குறைகள் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சு.ரவி தலைமை தாங்கினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மணி, இளநிலை பொறியாளர் சுபவாணி, நகர அ.தி.மு.க செயலாளர் கே.பி.பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சண்முகம் வரவேற்றார்.

கூட்டத்தில் அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தெருவிளக்குகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை சரிசெய்தல், தினமும் காலை, மாலை வேளைகளில் கொசுமருந்து அடித்தல், எஸ்.ஆர்.கேட்டில் இருந்து புதுப்பேட்டை, ஏ.பி.எம்.சர்ச் வழியாக பழனிப்பேட்டை செல்லும் பிரதான கால்வாயில் அடைப்பை சரிசெய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

பின்னர் சு.ரவி எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியதாவது:-

அரக்கோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்று உள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக நகராட்சியில் உள்ள 36 தெருக்களில் ரூ.4 கோடி மதிப்பில் சிமெண்டு சாலைகளும், 8 பிரதான சாலைகளில் 1 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் வரும் டிசம்பர் 6-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் பாதாள சாக்கடை திட்டத்தில் விடுபட்ட பகுதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட சிமெண்டு சாலை பணிகள் 2 மாதத்திற்குள் முடிக்கப்படும். படிப்படியாக பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சி.காமராஜ், செல்வம், அருள்மூர்த்தி, பத்மநாபன், கி.சரவணன், பாண்டியன், நகராட்சி மேலாளர் கோபிநாத், சுகாதார அலுவலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story