பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு குமாரசாமியுடன் பேசி கூடுதல் நிதி வழங்க நடவடிக்கை எடுப்பேன் சித்தராமையா பேட்டி
பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி குமாரசாமியுடன் பேசி கூடுதல் நிதி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மண்டியா,
பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி குமாரசாமியுடன் பேசி கூடுதல் நிதி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சித்தராமையா ஆறுதல்
மண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே கனகனமரடி கிராமத்தில் ஓடும் கால்வாயில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தண்ணீரில் மூழ்கி 30 பேர் பலியானார்கள். இந்த நிலையில், விபத்து நடந்த பகுதியை நேற்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பார்வையிட்டார்.
பின்னர் அவர், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதே நேரத்தில் விபத்து நடந்தது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் சித்தராமையா கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடுதல் நிதி வழங்க நடவடிக்கை
தனியார் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்ததில் 30 பேர் பலியாகி இருக்கிறார்கள். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. இந்த துயர விபத்து நடந்திருக்கக்கூடாது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று கூட தெரியவில்லை. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த துயரத்தை தாங்கி கொள்ளும் சக்தியை கடவுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி குமாரசாமி ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
அந்த நிதி உதவி போதாது என்று கிராம மக்கள் கூறுகின்றனர். அதனால் முதல்-மந்திரி குமாரசாமியுடன் பேசி, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதி வழங்க நடவடிக்கை எடுப்பேன். டிரைவரின் கவனக்குறைவு காரணமா?, இந்த பஸ்சுக்கு அனுமதி அளித்து போக்குவரத்து அதிகாரிகள் தவறு செய்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். விசாரணையின் போது தான் பஸ் விபத்தில் சிக்கியதற்கான காரணம் தெரியும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story