தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி வாலிபரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல்


தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி வாலிபரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 25 Nov 2018 3:33 AM IST (Updated: 25 Nov 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி வாலிபரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சிலம்பரசன்(வயது 23). அதே கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன்கள் முருகேசன், சின்னதுரை. இவர்கள் 2 பேரும் சேர்ந்து சம்பவத்தன்று சிலம்பரசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிலம்பரசன் வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முருகேசன், சின்னதுரையை தேடி வருகின்றார்.

இந்நிலையில் நேற்று மாலை சிலம்பரசன் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது உறவினர்கள், பொதுமக்கள் பரவாய்- குன்னம் செல்லும் சாலையில் சிலம்பரசனின் உடலை வைத்து குற்றவாளிகளான முருகேசன், சின்னதுரை ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் சிலம்பரசனின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், முருகேசன், சின்னதுரையை விரைவில் கைது செய்து விடுவோம் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பரவாய்- குன்னம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story