புயல் பாதிப்பு பகுதிகளுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து 5 இடங்களில் பொதுமக்கள் மறியல்


புயல் பாதிப்பு பகுதிகளுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து 5 இடங்களில் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 25 Nov 2018 3:58 AM IST (Updated: 25 Nov 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

புயல் பாதிப்பு பகுதிகளுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து 5 இடங்களில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் சாலையில் உள்ள அடப்பகாரன் சத்திரத்தில் கஜா புயல் காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் விழுந்துள்ளன. மரங்கள் விழுந்ததில் ஏராள மான வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலையில் பல நாட்கள் ஆகியும், இந்த பகுதிகளில் நிவாரண உதவிகளை செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை என அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை- மணப்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர் ணம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை யடுத்து கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை- மணப்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

இதேபோல் அன்னவாசல் ஒன்றியம் செல்லுகுடி பகுதியிலும் கஜா புயல் காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் விழுந்துள்ளன. மேலும் மரங்கள் விழுந்ததில் ஏராளமான வீடுகளும் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் பல நாட்களாகியும் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் புதுக் கோட்டை-மணப்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிவாரணம் வழங்க பரிந்துரை செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை யடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வெள்ளாளவிடுதி ஊராட்சி யில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள பொதுமக்கள் மின்சாரம், ரேஷன் பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு வெள்ளாளவிடுதி பஸ் நிறுத்தம் அருகே கந்தர்வகோட்டை- கறம்பக் குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அடுப்பு வைத்து சமைத்தனர்.

மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் கூறியதாவது:- கஜா புயல் தாக்கி பல நாட்கள் ஆகியும் தங்கள் பகுதிக்கு மின்சாரம், குடிநீர், ரேஷன் பொருட்கள் இதுவரை கிடைக்கவில்லை. அரசு அதிகாரிகள் யாரும் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. புயல் பாதிப்பு குறித்து சரியாக கணக்கெடுப்பு செய்ய வில்லை. நாங்கள் கடந்த பல நாட்களாக வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகிறோம். தங்களை ஆளும் கட்சியினரோ, அரசியல் கட்சியினரோ இதுவரை சந்திக்கவில்லை. தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் கொடுக்கும் பொருட்களையும் அரசியல் கட்சியினர் அபகரித்து தங்களுக்கு வேண்டியவர் களுக்கு கொடுக்கின்றனர். எனவே இதனை கண்டித்துதான் சாலையில் சமையல் செய்து மறியலில் செய்தோம் என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னர் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை யடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் வெள்ளாள விடுதி ஊராட்சி வளச்சேரிப் பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் கந்தர்வகோட்டை- கறம்பக்குடி சாலையில் தனியார் மதுபான ஆலைக்கு பணிக்கு சென்ற பணியாளர் வாகனங் களை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வ கோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் கந்தர்வ கோட்டை ஒன்றியம், வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கந்தர்வகோட்டை- செங்கிப் பட்டி சாலையில் மின்சாரம், குடிநீர் மற்றும் நிவாரண பொருட்கள் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கந்தர்வ கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.

Next Story