9 நாட்களுக்கு பிறகு வெளிச்சத்தை கண்ட வடகாடு பகுதி மக்கள் பகலில் ஆய்வு நடத்தும் படி கண்ணீர் மல்க வேண்டினர்


9 நாட்களுக்கு பிறகு வெளிச்சத்தை கண்ட வடகாடு பகுதி மக்கள் பகலில் ஆய்வு நடத்தும் படி கண்ணீர் மல்க வேண்டினர்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:04 AM IST (Updated: 25 Nov 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

மத்திய குழு வருகையால் 9 நாட்களுக்கு பிறகு வடகாடு பகுதி மக்கள் வெளிச்சத்தை கண்டனர். அப்போது அவர்கள் மத்திய குழுவினரிடம் பகலில் வந்து ஆய்வு நடத்தும்படி கண்ணீர் மல்க வேண்டினர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வடகாடும் ஒன்று. மின் கம்பங்கள், மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு

இந்த பகுதி மக்கள் கடந்த 9 நாட்களாக இருளில் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு மத்திய குழுவினர் வடகாடு பரமன் நகரில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்தனர்.

மத்திய குழு வருகையை தொடர்ந்து புயலால் சரிந்து இருளில் விழுந்து கிடந்த மரங்களை பார்வையிடுவதற்கு வசதியாக ஜெனரேட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு மின் விளக்குகள் எரிந்தன.

இதனால் 9 நாட்களுக்கு பிறகு அந்த பகுதி மக்கள் வெளிச்சத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

மத்திய குழுவினர் புயலால் சேதம் அடைந்த மரங்கள், வீடுகளை பார்வையிட்டனர். அப்போது அங்கு திரண்டு நின்ற பொதுமக்கள் மத்திய குழுவினரிடம், “ஐயா எங்கள் வீடு, தோட்டம், தென்னை மரங்கள் என்று எல்லாவற்றையும் இழந்து விட்டோம். இதனால் எங்கள் வாழ்வாதாரமே அழிந்து போய் விட்டது. நீங்கள் தான் வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும். இதுவரை எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. ஒரு வாரமாக ரோட்டில் தான் நிற்கிறோம். நீங்கள் வந்ததால் தான் எங்களுக்கு வெளிச்சமே கிடைத்து உள்ளது. எங்களுக்கு தண்ணீர் மட்டும் தான் தருகிறார்கள். ஆய்வு பணியை செய்ய பகலில் வாருங்கள்” என கண்ணீர் மல்க கூறினார்கள்.

பெண்களில் பலர் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களது கோரிக்கைகளை மத்திய குழுவினர் கருணையுடன் கேட்டு விட்டு அடுத்த இடத்தை பார்வையிட கிளம்பினர். குழு செல்லும் வழி நெடுக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

வீடு வாசல், தோட்டங்களை இழந்து தவிக்கும் வேதனையில் யாராவது ஆவேசப்பட்டு அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் இதனை தடுப்பதற்காக சாலை ஓரங்களில் கயிறு கட்டி பொதுமக்களை அதனை தாண்ட விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி வைத்து இருந்தனர். இதனால் பல இடங்களில் பொதுமக்கள் மத்திய குழுவினரிடம் தங்களது ஆதங்கத்தை நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் போனது.

Next Story