கீழ்வேளூர் பகுதியில் 6 இடங்களில் கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல்


கீழ்வேளூர் பகுதியில் 6 இடங்களில் கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:45 AM IST (Updated: 25 Nov 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி 6 இடங்களில் கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்வேளூர்,

கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக கீழ்வேளூர் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு மரங்கள், வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், நேற்று 10-வது நாளாக பல பகுதிகளில் மின் இணைப்பு கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனால் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கீழ்வேளூர் அருகே சீனிவாசபுரம், ஜீவா நகர், பட்டமங்களம், இலுப்பூர் சத்திரம் பஸ் நிறுத்தம், நீலப்பாடி மற்றும் கிள்ளுக்குடி ஆகிய 6 இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் கீழ்வேளூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Next Story